நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அசிசுல்ஹஸ்னிக்கு நாட்டின் உயரிய கவுரவம்: சோங் வேய், நிகோல் டேவிட் வரிசையில் இணைந்த ‘பாக்கெட் ராக்கெட்மேன்’

கோலாலம்பூர்: 

மலேசிய விளையாட்டு உலகின் பெருமைமிகு நட்சத்திரமான முஹம்மத் அசிசுல்ஹஸ்னி அவாங், நாட்டின் மிக உயரிய கூட்டாட்சி விருதுகளில் ஒன்றான 'Darjah Bakti' விருதைப் பெற்று மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த அரிய அங்கீகாரத்தைப் பெற்ற மூன்றாவது மலேசிய விளையாட்டு வீரராக அவர் திகழ்கிறார். இதற்கு முன் லீ சோங் வேய், நிக்கோல் என் டேவிட் ஆகிய விளையாட்டு ஜாம்பவான்கள் மட்டுமே இந்த பெருமையைப் பெற்றிருந்தனர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அரங்கில் மலேசியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்த அசுசுல்ஹஸ்னியின் அர்ப்பணிப்பு, தியாகம், தொடர்ச்சியான சாதனைகளுக்கான உயரிய தேசிய அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது.

‘The Pocket Rocketman’ என உலகம் போற்றும் 38 வயதான இந்த சைக்கிள் ஓட்ட வீரர், 2017 உலக டிராக் சைக்கிள் சாம்பியன்ஷிப்பில் கெய்ரின் பிரிவில் உலக சாம்பியனாகி வரலாறு படைத்தார். மேலும், 2020 டொக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ஒலிம்பிக் மேடையைத் தாண்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், பல்வேறு சர்வதேச அரங்குகளில் மலேசியாவுக்காக எண்ணற்ற பதக்கங்களை வென்று விளையாட்டு வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.

சமீபத்திலும் ஜப்பான் டிராக் கோப்பை தொடரில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று, தனது திறமையும் போராட்ட மனப்பான்மையும் இன்னும் மங்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

'Darjah Bakti' விருது, அசிசுல்ஹஸ்னி அவாங்கை மலேசியாவின் தலைசிறந்த விளையாட்டு சின்னங்களில் ஒருவராக மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைகளுக்கு அவர் விட்டுச் செல்லும் மகத்தான பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset