செய்திகள் இந்தியா
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
பெங்களூரு:
காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை முதல்வராக உள்ள டி.கே.சிவகுமார் விரைவில் முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியையும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க ‘அதிகார பகிர்வு’ ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி சித்தராமையாவை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லிக்கு அழைத்தார். மூத்த தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பெங்களூரு திரும்பிய சித்தராமையா காவேரி இல்லத்தில் அமைச்சர்களுக்கு விருந்தளித்தார். இதில் பங்கேற்ற டி.கே. சிவகுமார், சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அப்போது சித்தராமையா பேசும்போது, ‘’காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டதால், நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் பணி காலத்தில் கோபத்தில் உங்களைக் கடிந்து கொண்டிருந்தால், அதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என கலங்கிய கண்களோடு உருக்கமாகப் பேசினார்.
இதையடுத்து அமைச்சர்கள் அவரது கைகளை பற்றிக் கொண்டு ஆறுதல் கூறினர். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் அழுதவாறு முழக்கம் எழுப்பினர்.
பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் வெளியூர் சென்றிருந்ததால் அவரது செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘எனது கடிதத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார். கட்சி மேலிடம் எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முன்வந்தது.
ஆனால் நான் அதனை ஏற்க மறுத்துவிட்டேன். என் இறுதி மூச்சுஇருக்கும்வரை அரசியலமைப்பின் மதிப்பீடுகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் போராடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு முதல்வர் பதவி வழங்கிய சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி’’ என்றார்.
இதனிடையே டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக விரைவில் பதவியேற்க இருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதனிடையே காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்திக்க டி.கே.சிவக்குமாரும் சித்தராமையாவும் நேற்று தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
