செய்திகள் இந்தியா
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
பெங்களூரு:
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்குச் சென்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் (மே 26) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க முதல்வர் சித்தராமையா இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று மாலை 3 மணி அளவில் மக்கள் மாளிகைக்கு அவர் வருகை தந்தார்.
பின்னர், சித்தராமையா, டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, “நான் எனது கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். ஆளுநர் தற்போது இங்கு இல்லை. இன்று இரவு அவர் வர இருக்கிறார். எனவே, அவரது அலுவலகத்தில் நான் எனது ராஜினாமா கடிதத்தை அளித்தேன்.
எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், இது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட நடவடிக்கைதான். சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, புதிய சட்டமன்றக் குழு தலைவர் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
எனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் ஏற்கெனவே என்னிடம் கேட்டுக்கொண்டது. நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். தற்போது நான் எனது வாக்கை காப்பாற்றிவிட்டேன். கர்நாடகாவுக்கு சேவை செய்ய கட்சி எனக்கு இரண்டு முறை வாய்ப்புகளை வழங்கியது. அதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பின்புலம் என்ன?
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து டெல்லி மேலிடத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. அப்போது மேலிடத் தலைவர்கள், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 4, 2026, 12:55 pm
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
June 3, 2026, 3:50 pm
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
May 30, 2026, 12:57 pm
