நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: பெர்சத்துவுக்கு பாஸ் கடும் எச்சரிக்கை... கூட்டணியில் பிளவு வெடிக்குமா?

மாராங்:

பெரிகாத்தான் நேசனல் கூட்டணிக்குள் பெர்சத்துவுடன் நீடித்து வந்த முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட சமீபத்திய கருத்து மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“பொறுமைக்கும் வரம்பு உண்டு!” என எச்சரித்த ஹாடி, பெர்சத்துவுடனான உறவை பாஸ் மறுபரிசீலனை செய்யப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

மலாய்-முஸ்லிம் கட்சிகள், தீவிரவாதமற்ற முஸ்லிம் அல்லாத கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்த பாஸ் எடுத்த முயற்சிகளை பெர்சத்து தடுத்ததாக ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

“தேர்தலில் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாம் சரியான பாதையில் இல்லை என்பதற்கான சான்று அது,” என்று அவர் கடுமையாக தெரிவித்தார்.

முந்தைய மாநிலத் தேர்தல்கள், இடைத்தேர்தல்களில், தரையில் போதுமான தேர்தல் இயந்திரம் இல்லாதபோதும் பெர்சத்து அதிக தொகுதிகளை கோரியதாக ஹாடி சாடினார்.

“ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் களத்தில் வேலை செய்தது பாஸ் தொண்டர்கள்தான்,” என்ற அவரது கருத்து கூட்டணிக்குள் உள்ள பதற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.

16வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக பெர்சத்துவின் நிலை கூட்டணிக்குள் மாற வாய்ப்புள்ளதாக ஹாடி மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

“அரசியலில் எதுவும் சாத்தியமே. ஆனால் இனி பெர்சத்து பழையபடி நடக்க முடியாது,” என்ற அவரது வார்த்தைகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாஸ் தான் பெரிகாத்தான் நேசனலின் உண்மையான இயக்க சக்தி என்றும், தேர்தல் திசையை நிர்ணயிக்கும் அதிகாரம் தலைமைக்கே உண்டு என்றும் ஹாடி வலியுறுத்தினார்.

இதனிடையே, பாஸ் தனது சியூரா கவுன்சில், தேர்தல் குழு, ஆய்வு பிரிவுக்கு பெர்சத்துவுடனான உறவை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GE16 நெருங்கி வரும் சூழலில், பாஸ்–பெர்சத்து உறவில் உருவாகும் இந்த விரிசல், பெரிகாத்தான் நேசனலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மலேசிய அரசியலில் அடுத்த வெடிப்பு எப்போது என்பதே இப்போது அனைவரின் கவனமாக மாறியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset