நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் சரித்திர சாதனை: 1,500 மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான உலக பொதுமறை திருக்குறள் ஒப்பித்தல் விழா

தஞ்சோங் ரம்புத்தான்-

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் ஆதரவில், தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்ச்சி இன்று அருள்மிகு சமயபுர மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மலேசியா முழுவதும் உள்ள 60 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, திருக்குறளையும் அதன் பொருளையும் தனித்தனியாக திருக்குறளை ஒப்புவித்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தனர்.

இந்நிகழ்விற்கு மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் தளபதி எஸ்.பி. புனிதன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் ஆற்றிய உரையில், தமிழ் மொழியின் ஆகச்சிறந்த அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி ஒரு வரலாற்றுச் சாதனை. 

இத்தகைய பிரம்மாண்டமான சரித்திர நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்திய ஏற்பாட்டுக் குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் மலேசிய இந்திய மக்கள் கட்சி என்றும் தமிழுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் முதல் முக்கியத்துவம் வழங்கும். மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் எக்காலத்திலும் எம்மால் பாதுகாக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் பேரா மாநிலத் தலைவர் டத்தோ பா. சத்தியபாலா, மாநிலத் துணைத் தலைவர் எம்.எல். மணிவண்ணன், மாநிலப் பொருளாளர் சுப. கதிரவன், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் எஸ். சரவண குமார், பேராக் மாநில மகளிர் பிரிவுத் தலைவி இரா. கித்தா த. அன்னாவி, பேராக் ம.இ.கா இளைஞர் அணி தலைவர் தியாகேஷ் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற இந்த அரிய நிகழ்வைக் காண நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மண்டபத்தில் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset