நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'இரண்டாவது துபாயாக' பெர்லிஸ் உருவெடுக்க முடியும்

கங்கார்: 

வரும் ஆண்டுகளில், ஆசியான் நாடுகளுக்கு திறந்த நுழைவாயிலாக, 'இரண்டாவது துபாயாக' பெர்லிஸ் உருவெடுக்க முடியும் என்று பெர்லிஸ் ராஜா துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தீபகற்ப மலேசியாவின் வடக்கே பெர்லிஸின் மூலோபாய நிலைப்பாட்டின் காரணமாக, அந்த மாநிலம் ஒரு வர்த்தக மையமாகவும், புதுமை மையமாகவும், பிராந்திய பொருளாதார சந்திப்பு மையமாகவும் வளர முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக அவர் கூறினார்.

"துபாய், மத்திய கிழக்கிற்கான திறந்த நுழைவாயிலாக உலக அரங்கில் அறியப்பட முடிந்தால், பெர்லிஸ் மாநிலமும் 'இரண்டாவது துபாயாக' உருவெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

"மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு, வடக்கு பகுதி செயல்பாட்டு நிறுவனம் (என்சிஐஏ), குஸ்க்கோப் (தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு), கூட்டுறவு இயக்கத்தின் வலிமை ஆகியவற்றின் ஆதரவுடன், பெர்லிஸ் ஒரு வர்த்தக மையமாக, புதுமை மையமாக, பிராந்திய பொருளாதார சந்திப்பு மையமாக வளர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள நீர்ப்பாசனம், வடிகால் துறையின் (JPS) மிதக்கும் சந்தையில், 'நாட் அன்டர்னாசியோனல் அங்காசா பெர்லிஸ் 2026' நிகழ்ச்சியைத் திறந்து வைத்துப் பேசிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெர்லிஸ் ராஜா முடா துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல், பெர்லிஸ் ராஜா புவான் முடா துவாங்கு டாக்டர் ஹஜ்ஜா லைலாதுல் ஷஹ்ரீன் அகாஷா கலீல் ஆகியோரும் உடனிருந்தனர்.

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்ஸா, மலேசிய தேசிய கூட்டுறவு இயக்கத்தின் (Angkasa) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல் ஃபத்தாஹ் அப்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், அந்த 'நாட்' (சிந்தனைப் பகிர்வு மன்றம்) என்பது, விவாதத்திற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்குமான ஒரு தளம் மட்டுமல்ல, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனாவின் பங்கேற்பை ஒன்றிணைக்கும், மிகவும் விரிவான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது என்றும் துவாங்கு சையத் சிராஜுதீன் கூறினார்.

இந்தத் திட்டம், மாநில, தேசிய மட்டங்களில் மட்டும் வரவேற்பைப் பெறவில்லை, மாறாக சர்வதேச கவனத்தையும், பங்கேற்பையும் ஈர்ப்பதில் வெற்றி பெற்றதாகவும், இதன் மூலம் பெர்லிஸ் ஒரு பிராந்திய கூட்டுறவு பொருளாதார வலையமைப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது மற்ற நாடுகளால் நம்பப்பட்டு, மதிக்கப்படுகிறது என்றும் மேலும் பேசிய அவர் கூறினார்.

"இது, இந்த மாநிலத்தின் ஆற்றலுக்கு ஒரு பெரும் அங்கீகாரமாகும், இதை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset