செய்திகள் மலேசியா
அரசு செலவின மறுஆய்வில் சுகாதாரம், கல்வி பாதிக்கப்படாது: பிரதமர்
புத்ராஜெயா:
மருத்துவம், கல்வி உள்ளிட்ட முக்கிய பொதுச் சேவைகள், அரசாங்கத்தின் செயல்பாட்டுச் செலவின மறுஆய்வு முன்மொழிவால் பாதிக்கப்படாது.
புதிய மருத்துவர்கள், செவிலியர்களைப் பணியமர்த்துவது, கிளினிக்குகளைக் கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
"சில செலவினங்களை மறுசீரமைப்பது, மறுபரிசீலனை செய்வது குறித்து, சில குழப்பங்கள் உள்ளன.
"மருத்துவச் சேவைகள், புதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணியமர்த்துவது முற்றிலும் பாதிக்கப்படாது. கிளினிக் கட்டுமானமும் பாதிக்கப்படாது.
"மிகவும் ஆடம்பரமான மருத்துவமனைத் திட்டங்களின் நோக்கம் மட்டுமே சிறிது குறைக்கப்படும்" என்று இன்று இங்கு நடைபெற்ற இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப், அவரது துணை அமைச்சர் சையது இப்ராஹிம் சையது நோ ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சின் செலவினங்கள் குறைக்கப்பட்ட போதிலும், தற்போதைய மாணவர்களின் சேர்க்கைக்கான புதிய வகுப்பறைகளைக் கட்டுவது பாதிக்கப்படவில்லை என்று அன்வர் கூறினார்.
அதற்குப் பதிலாக, அதிகப்படியான செலவினங்களைக் குறைப்பதில், வெளிநாட்டுப் பயிற்சிப் படிப்புகள், ஆடம்பர ஹோட்டல்களில் நடைபெறும் விழாக்கள், முதன்மையான தேவைகளுக்கு அப்பாற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை வெட்டுவதில் சேமிப்புகள் கவனம் செலுத்துவதாக அன்வர் தெரிவித்தார்.
உள்நாட்டில் நடத்தக்கூடிய படிப்புகள் உள்நாட்டிலேயே நடத்தப்படும் என்றும், செலவுகளைக் குறைப்பதற்காக, அதிகாரப்பூர்வ விழாக்கள் இப்போது அமைச்சு வளாகங்களில் நடத்த ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
"ஆடம்பர ஹோட்டல்களில் விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மாறாக அமைச்சில் நடத்தப்படுகின்றன. சாதாரணத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.
ஏப்ரல் 29 ஆம் தேதி, அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில், நிதி அமைச்சு தங்களின் செயல்பாட்டுச் செலவினங்களை மறுபரிசீலனை செய்ய அனைத்து அமைச்சுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
உலகளாவிய விநியோகச் சவால்களுக்கு மத்தியில், திட்ட நடவடிக்கைகள், செயல்படுத்தலைப் பகுத்தறிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போவதாக ஃபாஹ்மி கூறியிருந்தார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கீழான செலவுச் சரிப்படுத்தும் நடவடிக்கைகள், முன்னணிப் பணியாளர்கள் அல்லது அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது என்றும், முக்கியமற்ற செலவினங்கள் மட்டுமே குறைக்கப்படுகின்றன என்றும், நிதி அமைச்சு அடுத்த நாள் தெரிவித்தது.
செலவுச் சரிப்படுத்தும் வழிகாட்டுதல்கள் "முக்கியமற்ற செலவினங்களை மட்டுமே உள்ளடக்கும்" என்றும், அடிப்படை சேவைகள், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்பட்டபடி தொடரும் என்றும் அந்த அமைச்சு கூறியது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மிகப்பெரிய பெறுநர்களில் ஒன்றான சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுகளுக்கான நிதியும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், முன்னணிச் சேவைகள், குறிப்பாக சுகாதாரத் துறையில், சீர்குலைக்கப்படாது என்று அந்த அமைச்சு கூறியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 4, 2026, 6:25 pm
தடை செய்யப்பட்ட பட்ட நூலால் நேர்ந்த விபரீதம்
May 4, 2026, 6:05 pm
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம் புரண்டது
May 4, 2026, 3:40 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியின் நிலை மறுபரிசீலனையில் உள்ளது: அமினுதீன்
May 4, 2026, 3:10 pm
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்: 'சிவப்பு நாயகர்களுக்கு' மாமன்னர் புகழாரம்
May 4, 2026, 2:44 pm
'இரண்டாவது துபாயாக' பெர்லிஸ் உருவெடுக்க முடியும்
May 4, 2026, 2:11 pm
பி15 உயிரி எரிபொருள் உற்பத்தி ஜூன் 1 முதல் தொடங்குகிறது: துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி
May 4, 2026, 11:18 am
மாணவி கொலை வழக்கு: தம்பதிக்கு போலீஸ் ஜாமீன்
May 4, 2026, 10:38 am
