நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்

கிள்ளான்:

இந்த மாத தொடக்கத்தில் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் முன், தனது ஆண் குழந்தையை வேண்டுமென்றே கைவிட்ட குற்றச்சாட்டில்,  தனித்து வாழும் தாய் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

30 வயதுடைய நோர் ஐன் ஷஃபினா நோராஸ்மான், தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் சித்தி சுபைதா மஹத் இந்தத் தண்டனையை விதித்தார்.

அபராதம் செலுத்தத் தவறினால், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, காலை 11 மணியளவில், கிள்ளான், கம்போங் ரந்தாவ் பஞ்சாங், ஜாலான் ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள ஒரு வீட்டின் முன் அம்மாது தன் குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317-இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

துணை வழக்குத் தொடரும் அதிகாரி சல்மான் அல் ஃபரிஸி தலைமையில் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர், தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் கே. நதியாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.

  ஒரு முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியையான தனது வாடிக்கையாளர், ஒரு குற்ற வழக்கில் ஈடுபட்டதால் வேலையை இழந்ததாகக் காரணம் காட்டி குறைந்த அபராதத் தொகையை விதிக்குமாறு கே. நதியா நீதிமன்றத்தைக் கோரினார்.

தனது செயலுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வருந்துவதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தையை தேசியப் பதிவுத் துறையில் பதிவு செய்ய விரும்புவதாகவும் அவர் மேலும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset