செய்திகள் மலேசியா
பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.ஏ.டி.கே அமலாக்கப் பிரிவின் அதிரடி சோதனை: 61 பேர் அதிகாரியினால் கைது
கிள்ளான்:
கிள்ளான், பண்டார் அர்மாடா புத்ராவில் போதைப்பொருள் கூடாரமாகச் செயல்பட்டு வந்த பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை (AADK) இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தியது.
'ஒப் பெர்டானா' (Op Perdana) எனும் பெயரில் குடிவரவுத் துறை, தேசியப் பதிவுத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மொத்தம் 121 பேர் விசாரணைக்காகப் பிடிபட்டனர். அவர்களில் 61 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய சில தம்பதிகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் பிடிபட்டது அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் சிலர் கூரையின் மீது ஏறி ஒளிந்துகொண்டும், சிலர் தூங்குவது போல நடித்தும் தப்பிக்க முயன்றனர். நான்கு தொகுதிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், சோதனையைத் தாமதப்படுத்த குடியிருப்பாளர்கள் சட்டவிரோதமாக இரும்புத் தடுப்புகளைப் பயன்படுத்தியதும், மின்சாரம், நீர் இணைப்புகளைத் திருட்டுத்தனமாகப் பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டது.
ஏ.ஏ.டி.கே அமலாக்கப் பிரிவு இயக்குநர் மஹாதிர் எலியாஸ் கூறுகையில், இப்பகுதி போதைப்பொருள் புழக்கம் மிகுந்த ஒரு இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 27 முதல் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 311 பேர் பிடிபட்டதாகவும், அவர்களில் 219 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் 'ஷாபு' (Syabu) வகை போதைப்பொருளின் பயன்பாடே அதிகளவில் இருந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கிள்ளான் துறைமுகச் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒரு சிறப்புச் செயற்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பாழடைந்த இந்தக் கட்டிடங்களின் தற்போதைய உரிமையாளர்கள் யார் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதோடு, போதைப்பொருள், சட்டவிரோதக் குடியேறிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை, மாநகர மன்றத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 4:41 pm
கொழும்பு கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 11:57 am
