நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

ஷா ஆலம்: 

கோலா சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் ஆலம் பகுதியில் உள்ள வாய்க்காலில் விழுந்து காணாமல் போன 10 வயதுச் சிறுவன், மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டான். 

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் போது, கைரில் இசானி எனும் அந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

தீயணைப்பு, மீட்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் (SAR) மூன்றாவது நாளில், இன்று மதியம் 1.00 மணியளவில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

ஈஜோக், சுங்கை பூலோ ஆற்றுப் பகுதியில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல், அவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று சிறுவன் தனது நண்பர்களுடன் கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அருகில் இருந்த வாய்க்கால் பகுதிக்குச் சென்றபோது பலத்த மழையினால் ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனின் உடல் மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் நீர்நிலைகள், வாய்க்கால்களுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset