நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது இடத்தில் குப்பை வீசியவர்களுக்கு நூதனத் தண்டனை: சிங்கப்பூரர்கள் உட்பட 20 பேர் சமூகச் சேவையில் ஈடுபட்டனர்

ஜொகூர் பாரு: 

பொது இடங்களில் குப்பை வீசிய குற்றத்திற்காக இரண்டு சிங்கப்பூரர்கள் உட்பட மொத்தம் 20 பேருக்குச் சமூகச் சேவை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று காலை ஸ்குடாய் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

19 முதல் 63 வயதுக்குட்பட்ட இந்தக் குற்றவாளிகள், 2007-ஆம் ஆண்டின் திடக்கழிவு, பொதுத் தூய்மை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, அதிகாரிகளின் மேற்பார்வையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

குற்றவாளிகளில் 13 உள்ளூர்வாசிகள், மூவர் இந்தோனேசியர்கள், வங்காளதேசம், நேபாளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

இவர்கள் அனைவரும் பொது இடங்களில் சிகரெட் துண்டுகள், பானப் டப்பாக்கள், நெகிழிப் பைகளை வீசியதற்காகப் பிடிபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு குற்றவாளியும் தங்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள சமூகச் சேவை நேரத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிப்பது கட்டாயமாகும்.

ஜொகூர் மாநில எஸ்.டபிள்யூ.கோர்ப் (SWCorp) இயக்குநர் ஜைனல் ஃபித்ரி அஹம்மத் இது குறித்துக் கூறுகையில், இத்தண்டனை வெறும் தண்டனை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். 

ஜொகூர் மாநிலத்தில் இதுவரை 822 விதிமீறல் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்தம் RM21,300 ரிங்கிட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு RM2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சமூகச் சேவை செய்ய உத்தரவிடப்படும்.  

நீதிமன்றம் வழங்கும் இந்தச் சமூகச் சேவை உத்தரவை நிறைவேற்றத் தவறினால், அதிகபட்சமாக RM10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தூய்மைப் பண்பாட்டை வளர்க்கவும், சட்டக் கடப்பாட்டை உறுதிப்படுத்தவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset