நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கதிர்வீச்சுப் பாதிப்பா?”: சுகாதார அமைச்சின் அதிரடி விளக்கம்

கோலாலம்பூர்: 

மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (PPUM) அணுசக்தி மருத்துவப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கதிர்வீச்சுப் பாதிப்பால் புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறப்படும் புகாரில் எவ்விதத் தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மருத்துவக் கதிர்வீச்சு ஒழுங்குமுறைப் பிரிவின் (BKRP) விரிவான ஆய்வுக்குப் பிறகு, அந்த மையத்தின் கதிர்வீச்சுப் பாதுகாப்பு நிலை கட்டுக்குள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த மையத்தில் எக்ஸ்ரே (X-ray) நிபுணராகப் பணியாற்றிய நூர் ஃபௌசியா எனும் 35 வயது பெண்மணி, முறையான கதிர்வீச்சுப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததே தனது நான்காம் கட்டப் புற்றுநோய்க்குக் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். 

இதனால் தான் கட்டாயப் பணி ஓய்வு பெற நேரிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இப்புகாரைத் தொடர்ந்து, 1984-ஆம் ஆண்டு அணுசக்தி உரிமச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.

இச்சோதனையின் முடிவில், அங்கு கதிர்வீச்சுப் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், ஊழியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பு முறையாகப் பேணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. 

பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்களின் நலனே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், கதிர்வீச்சுத் தரநிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சு உறுதியளித்துள்ளது.

தவறான தகவல்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சுகாதார அமைச்சு, தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தெரிவித்தது. 

மேலும், இத்தகைய உணர்ச்சிகரமான விவகாரங்களில் எவ்வித யூகங்களுக்கும் இடம் அளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset