நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் புக்கிட் லஞ்சான் நிலச்சரிவு விவகாரம்: புதிய நீர் தேக்க அமைப்பை உருவாக்க மாநகராட்சி பரிந்துரை

கோலாலம்பூர்: 

கம்போங் புக்கிட் லஞ்சான் பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அங்கு பிரத்யேக 'உள்ளூர் நீர் தேக்க அமைப்பு' ஒன்றை உருவாக்க கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) பரிந்துரைத்துள்ளது. 

அப்பகுதியில் வழிந்தோடும் மழைநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்க முடியும் என்று மாநகராட்சி கருதுகிறது.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய பின்னர் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ ஃபட்லூன் மாக் உஜுட் தெரிவித்தார். 

கனமழை பெய்யும் காலங்களில் வெள்ளத்தைத் தவிர்க்கவும், நீர் வழிந்தோடுவதை முறைப்படுத்தவும் தேவையான ஆரம்பக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

கூட்டரசு பிரதேசத்தின் அமைச்சர் ஹன்னா யோ முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு மேயர் இதனைத் தெரிவித்தார்.

கம்போங் புக்கிட் லஞ்சான் குடியிருப்பாளர்கள் அண்மையில் தங்கள் வீடுகளுக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு குறித்துப் பெரும் அச்சம் தெரிவித்திருந்தனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பகுதியில் இருந்த காடுகள் விவசாயத் தோட்டங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்தே இத்தகைய நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் மாநகராட்சி தற்போது இந்தத் தீர்வினை முன்வைத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset