நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உபர் கோப்பையில் இருந்து பேர்லி விலகிக் கொள்கிறார்

கோலாலம்பூர்: 

முதுகில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, நாட்டின் மகளிர் இரட்டையர் வீராங்கனை பேர்லி டான், 2026 உபர் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அப்போட்டியில் அணியுடன் இருக்க முடியாமல் போனதில், தான் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக பேர்லி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

"உங்களை ஏமாற்றியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த முறை உபர் கோப்பையில் பங்கேற்க முடியாது என்று சொல்வதற்கு எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது" என்றார் அவர்.

முந்தைய போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் மீண்டும் வந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காக, தான் ஓய்வெடுக்கும் கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே காயம் தனது வாழ்க்கையைக் கிட்டத்தட்ட பாதித்ததை பேர்லி வெளிப்படுத்தினார். இது, இந்த முறை விளையாடாமல் இருப்பதற்கான முடிவை ஏற்றுக்கொள்வதை மிகவும் கடினமாக்கியுள்ளது.

"நான் ஒருபோதும் களத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. நான் கடைசி வரை போராடுவேன். ஆனால், இந்த முறை என் உடல் நிறுத்துவதற்கான சமிக்ஞையைக் கொடுக்கிறது, நான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

அதே நேரத்தில், இந்த முடிவு தனக்கு மட்டும் கடினமானது அல்ல, மாறாக, ஒரு பெரிய அரங்கில் சவால்களை எதிர்கொள்ளும் தனது சக வீரர்களுடன் இருக்க முடியாமல் போனதால், அது உணர்ச்சி ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், காயம் காரணமாக, பேர்லி 2026 உபர் கோப்பைக்கான தேசிய அணியில் இணைந்து செல்ல மாட்டார் என்பதை மலேசிய பூப்பந்து சங்கம் உறுதிப்படுத்தியது.

சம்பந்தப்பட்ட வீராங்கனையின் உடல் தகுதி நிலை குறித்த இறுதி மதிப்பீட்டிற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாட்டின் இரட்டையர் பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனாக்கி கூறினார்.

"பேர்லி விளையாடும் நிலையில் இல்லை. அணி சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset