நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு அனைவருக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிறக்கும் 'பராபவ' ஆண்டு அனைவருக்கும் நன்மைகள், முன்னேற்றம், அமைதி, ஒற்றுமை, அன்பு தரும் ஆண்டாக அமையட்டும்.

இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இந்துக்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டு, சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி, மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் விஷு அசாம்ஷங்கள் என தொடர்ச்சியாக வரும் புத்தாண்டுகளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. (மூதுரை 9)

ஒளவையாரின் இந்த கூற்றைக் கடைப்பிடித்து, சிறந்த குணமுடையோரை நேரில் காண்பது, அவர்களின் பயனுள்ள அறிவுரைகளைக் கேட்பது, நற்பண்புகளைப் போற்றுவது மற்றும் அவர்களுடன் இணங்கி வாழ்வது போன்ற சிறந்த நன்மைகளைத் தரக்கூடிய விஷயங்களை மட்டும் பார்ப்போம், கேட்போம், கடைப்பிடிப்போம். 

இந்துக்களின் மரபு தொட்ட பெருமைகளைத் தாங்கி வரும் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அனைவருக்கும் அமைய வேண்டும்.

அனைவருக்கும் நல்லதைத் தரும் ஒரு பொன்னான ஆண்டாக மலர வேண்டும். புதிய நம்பிக்கைகளை விதைத்து, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நிரம்பி இருக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்போம். பிறக்கும் 'பராபவ' வருடம் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் கொண்டுவர இறைவனை வேண்டுகிறேன்.

சீக்கிய சமுதாயத்தினருக்கு வைசாக்கி என்பது புத்தாண்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு மகத்தான நாளாக அமைகிறது.

இது விவசாய அறுவடைக் காலத்தையும் குறிக்கிறது. பக்தியும், சிந்தனையும், சமூக ஒற்றுமையையும் கொண்டாடும் இந்த நாள், சீக்கியர்களின் ஆன்மிக அகவாழ்வையும், சமூக பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த வைசாக்கி விழா, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை, ஆனந்தம், ஒளி, மற்றும் உன்னத இலக்குகளை நோக்கிச் செல்லும் ஆற்றலை தரட்டும். அனைவருக்கும் அமைதியும் வளமையும் நல்கும் புத்தாண்டாக இது அமைய வாழ்த்துகிறேன்.

தொடர்ந்து வரும் விஷு பண்டிகை, மலையாளிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருநாளாகத் திகழ்கிறது.

இந்தப் புதிய ஆண்டின் தொடக்கம், புதிய நம்பிக்கைகள், இலக்குகள் மற்றும் ஆற்றல்மிக்க துவக்கங்களின் அஸ்திவாரமாக அமைகிறது.

விஷு என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும் புனித நாளாகவும், மனமகிழ்வோடு குடும்பத்தினருடன், உறவுகளுக்கிடையிலான பாசத்தையும் மகிழ்ச்சியையும் வலுப்படுத்துகிறது.

ஒன்றாக மலரும் இந்த புத்தாண்டுகள் நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றாகப் பயணிப்போம். ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset