நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லையில் பரபரப்பு: பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர் மலேசியாவில் கைது

புக்கிட் காயூ ஹீத்தாம்:

மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில், பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்டதாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையினர் கைது செய்துள்ளனர். புக்கிட் காயூ ஹீத்தாம் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகத்தில் (ICQS) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் தாய்லாந்து பதிவு எண்கொண்ட கார் ஒன்றை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தபோது, அதன் பின்பகுதி, இருக்கைகளுக்கு அடியில் ரகசிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் RM450 ரிங்கிட் மதிப்புள்ள 400 லிட்டர் பெட்ரோலை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு 50 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெட்ரோல், வாகனம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு RM6,550 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.

மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட நபர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் குபாங் பாசு உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

எல்லைப் பகுதியில் கடத்தல் நடவடிக்கைகளை ஒழிக்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தீவிர கண்காணிப்பு தொடரும் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset