நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

‘Who am I?’ நான் யார்? - லோகநாயகி இராமச்சந்திரன் 

‘ஹூ ஆம் ஐ?’ (நான் யார்?) என்றொரு ஜாக்கி சான் படம். 

தான் யாரென்றே தெரியாமல் ஜாக்கி சான், ஆப்பிரிக்க பழங்குடி இன மக்கள் மத்தியில் சுற்றிக் கொண்டிருப்பார். 

அவர் பேரை பழங்குடி மக்கள் விசாரிக்க, அவருக்கு தான் யாரென்றே புரியாததால், ‘நான் யார்?’ என்று அவர்களிடமே கேட்பதற்காக அவர், ‘ஹூ ஆம் ஐ?’ என்று கேட்பார். 

பழங்குடி மக்கள், அதுதான் அவர் பெயர் என்று நினைத்து ‘ஹூ ஆம் ஐ’ என்றே அவரைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். 

ஜாக்கி சான், தான் யாரென்று தெரியாததாலேயே பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார். பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு அல்லது மாட்ட வைக்கப்பட்டபின், கடைசியில்தான் தெரியும், அவர் பன்னாட்டு ராணுவத்தின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த மாபெரும் வீரன் என்று! 

90 களில் வந்த இந்தத் திரைப்படம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது!

‘இப்போது எதற்கு இந்தப் படம் பற்றி?’ என்கிறீர்களா... காரணம் இருக்கிறது! 

எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர், பல்வேறு மன உளைச்சல்களில் சிக்கி, கவுன்சிலிங்குக்காக ஒரு மனநல மருத்துவரிடம் போனார். அந்த மருத்துவர் அவரிடம், ‘நீங்களே உங்களை ஒரேயொரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான விடை கிடைக்கும்’ என்றார். 

Who Am I Really In The Inside? Quiz! - ProProfs Quiz

அந்தக் கேள்வி: ‘நான் யார்?’ (‘Who am I?’) இன்னொரு பிஸினஸ்மேன்...

அவருக்கும் பல வழிகளில் பல்வேறு பிரச்னைகள். மன அமைதி தேடிய அவர், ஆன்மிக குரு ஒருவரை சந்தித்தார். அந்த பிஸினஸ்மேனிடம் அந்த குரு சொன்ன ஆலோசனை... ஆச்சரியப்படாதீர்கள், வேறு ஏதுமில்லை, ‘நான் யார்? (‘Who am I?’) என்ற கேள்வியை நீ முதலில் உன்னிடமே கேட்டுவிட்டு வா’ என்பதுதான்.

ஆம், அந்தக் கேள்வி இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கேள்வி. நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருந்தீர்களோ, அதற்கான விடையைத் தரும் மாயாஜால கேள்வி!

எனக்குத் தெரிந்த ஒரு ஐ.டி. இளைஞர், இன்று விவசாயத்தில் மிக நல்ல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறார். ஆர்கானிக்காக கெமிக்கல் சேராத உணவை இந்த உலகத்துக்காக விளைவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏ.சி. அறையில் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டிருந்த விரல்கள் இன்று மண்ணில் புரள்கின்றன... மிக நல்ல பலனுக்காக! 

பிரமாண்ட ஏ.சி. அறைக்குள் பணிபுரிந்த அவருக்குள், ‘இது உனக்கானதல்ல. நீ வேறு ஏதோ ஒன்றுக்காக படைக்கப்பட்டிருக்கிறாய்!’ என்ற குரல் கேட்டிருக்க வேண்டும். 

அதனால்தான், கைநிறையக் கிடைத்த சம்பளம், வசதி வாய்ப்புகள் என எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, மனசு சொன்ன வேலையை, தான் இந்த பூமியில் படைக்கப்பட்டதன் பலனை மன நிறைவாகச் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நிறைவும், அந்த பூர்த்தியான மனசும்தான் அவர் தேடியது! அதை அவர் அடைந்து விட்டார்!

அதே போன்று ‘இது உனக்கானதல்ல, உனக்கானதுடன் நீ உன்னைப் பொருத்திக் கொள்!’ என்று கவுன்சிலிங்குக்கு சென்ற இளைஞனுக்கும், குருவிடம் சென்ற அந்த பிஸினஸ்மேனுக்கும்கூட மனசின் குரல் சொல்லியிருந்திருக்கக்கூடும்! 

அவர்கள் மனசு தவித்திருக்கக்கூடும். அந்த தவிப்புதான் அவர்களை அதைப் பற்றித் தேட வைத்திருக்கிறது. 

அதனால்தான், அதற்குரிய ஒரே பதிலான அந்தக் கேள்வியை அந்த மனநல நிபுணரும் குருவும் சொல்லியிருக்கிறார்கள். 

இன்றும் நம் ஆன்மிகத்தின் அடிப்படை கேள்வியாக இதைத்தான் கேட்கச் சொல்கிறது நமது சமயங்கள். 

ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தக் கேள்விக்கு வேறு யாரும் பதில் சொல்ல முடியாது நம்மைத் தவிர! 

நம்மை உள்நோக்கி நமக்குள்ளேயே வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறது இந்தக் கேள்வி. 

மனசின் தெருக்களில், அதன் பாதையில் சென்று கொண்டே இருந்தால், நிச்சயம் எங்காவது ஓரிடத்தில் பளிச்செனத் தென்படும் நமக்கான பதில்!

சரி, ஏன் இந்தக் கேள்விக்கான பதிலை நாம் கண்டுபிடிக்க வேண்டும்?

நமக்கு பிரச்னைகள், மனக் கவலைகள், டென்ஷன்கள் இல்லாத ஒரு அற்புதமான வாழ்க்கை தேவையென்றால், நமக்கு இதற்கான பதில் தேவை. 

அற்புதமான வாழ்க்கைதானே நமக்கான தேவை!

- லோகநாயகி இராமச்சந்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset