நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சூடான் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்: 13 குழந்தைகள் உட்பட 64 பேர் பலி

கார்டூம்:

சூடானின் கிழக்கு டார்ஃபூர் பகுதியில் உள்ள எல்-டேய்ன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், 13 குழந்தைகள் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 89 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் மருத்துவர்கள், செவிலியர்களும் அடங்குவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் ராணுவ ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்டதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலால் மருத்துவமனையின் குழந்தை நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. 

இதன் காரணமாக, அப்பகுதியில் அடிப்படை மருத்துவ சேவைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினால் சூடான் நிலைகுலைந்துள்ள சூழலில், இத்தகைய தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சாடியுள்ளார்.

தற்போது காயமடைந்தவர்களுக்குப் பிற மருத்துவ வசதிகள் மூலம் சிகிச்சை அளிக்க உலக சுகாதார நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 

அவசர கால மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்களை விநியோகிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

"இனிமேலும் இரத்தம் சிந்தப்படுவதை அனுமதிக்க முடியாது, இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என உலக நாடுகளுக்கும், போர் அமைப்புகளுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset