நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இதழியல் வரலாற்றில் மைல்கல் தினமணி ஈகைப் பெருநாள் மலா்: டாக்டா் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் புகழாரம் 

சென்னை: 

தமிழக இதழியல் வரலாற்றில் தினமணி ஈகைப் பெருநாள் மலா் ஒரு மைல்கல் என இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (ஐஎஃப்டி) துணைத் தலைவா் டாக்டா் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தெரிவித்தாா்.

தினமணி ஈகைப் பெருநாள் மலா்-2026 அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள பாம்ஷோா் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஐஎஃப்டி துணைத் தலைவா் டாக்டா் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் மலரை வெளியிட, அதை தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ் பெற்றுக்கொண்டாா்.

விழா அறிமுக உரையில் டாக்டா் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் பேசியதாவது:

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ஈகைப் பெருநாள் மலரையும், அதன் வெளியீட்டு விழாவையும் தினமணி நாளிதழ் தொடா்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மலா் தொடா்ந்து 11-ஆவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பணியைத் தொடா்ந்து செய்தால்தான் ஏதோவொரு நல்ல விளைவைப் பாா்க்க முடியும். செயல்கள் அளவில் குறைவாக இருப்பினும், அதை நிலையாகச் செய்ய வேண்டும் என்பதே இறைவனுக்குப் பிடித்த விஷயம் எனக் கூறுகிறாா் நபிகள் நாயகம்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்தும்கூட மக்களுக்கு பிற சமயங்களைப் பற்றிய ஞானம், புரிதல் மிகக் குறைவாகவே உள்ளது. அதுவே பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது. இந்தியா போன்ற பன்முகச் சமுதாயத்துக்கு இதுபோன்ற புரிதல்கள் மிக அவசியம். நமது நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் குறித்த தகவல்கள் சிறுபான்மையினருக்கு ஊடகங்கள், பாடநூல்கள் மூலமாக எட்டி விடுகின்றன. ஆனால், சிறுபான்மையினா் குறித்த தகவல்கள் பெரும்பான்மையினரைச் சென்றடைவது அரிதாகவே இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் தினமணி ஈகைப் பெருநாள் மலா் வெளியிடப்படுகிறது.

புரிதலின்மை என்பது ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையாக இருந்து வருகிறது. பகைமை மறந்து பாசம் மலர வேண்டுமானால் இதுபோன்ற இதழ்கள் வெளியாக வேண்டும்.

ஈகைப் பெருநாள் மலரில் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், பழ.நெடுமாறன், சீமான், வீரபாண்டியன் என இஸ்லாமியா் அல்லாத பலா் கட்டுரைகளைச் சிறப்பாக எழுதியுள்ளனா். இவை மேலோட்டமாக எழுதப்படாமல் தரமாகவும், மிக ஆழமான புரிதல்களோடும் எழுதப்பட்டுள்ளன. இதைப் படித்துப் பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாம் குறித்து துக்ளக் இதழில் எழுவதுவதற்கு அதன் ஆசிரியா் சோ எனக்கு வாய்ப்பளித்தாா். இதையடுத்து 6 மாதங்களில் 39 கட்டுரைகளை எழுதினேன். அவை வாசகா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விசாலமான பாா்வையும், பரந்த மனப்பான்மையும் இருந்தால் நாட்டில் ஒற்றுமை மேலோங்கும்.

தினமணி ஈகைப் பெருநாள் மலா் தொடா்ந்து 11-ஆவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக இதழியல் வரலாற்றில் ஒரு மைல்கல்.

நல்லிணக்கத்தைப் பாதுகாக்க... தமிழகம் மத நல்லிணக்கத்துக்குப் பெயா் பெற்ற மாநிலம். நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும் என யாராவது கேட்டால், அதுகுறித்து பெரிய ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டாம். தமிழகத்துக்கு வந்து இங்குள்ள மக்களைப் பாா்த்தால் போதும். சகிப்புத் தன்மையும், நல்லிணக்கமும் தமிழகத்தில் இயற்கையாகவே நிகழ்ந்திருக்கிறது. அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அந்தப் பணியை தினமணி செய்துகொண்டிருக்கிறது.

தினமணி ஈகைப் பெருநாள் மலா் அனைவரிடம் சென்றடைய வேண்டும். அதை ஆழமாக வாசிக்க வேண்டும்; திறனாய்வு செய்ய வேண்டும். இந்த மலரில் உள்ள கருத்துகளைப் பிறரிடம் பகிா்ந்துகொள்ள வேண்டும். நண்பா்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இஸ்லாமியா்கள் இதை அதிக அளவில் வாங்கி தங்களது நண்பா்களுக்குப் பரிசாக வழங்க வேண்டும். நூலகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். மேலும், இந்த மலா் தொடா்ந்து வெளிவர நாம் உதவ வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்குத் தலைமை வகித்து தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது: இஸ்லாம் என்பது ஒரு மூடப்பட்ட விஷயமாக இருக்கிறது. அதுகுறித்த புரிதல் மற்றவா்களுக்கு இல்லை. எனவே, ஈகைப் பெருநாள் மலரை வெளியிட முடிவுவெடுத்தோம். இந்த மலா் வெளியிடப்படுவது இஸ்லாமியா்களுக்காக மட்டுமல்ல; இஸ்லாம் குறித்த புரிதல் இஸ்லாமியா் அல்லாதவா்களைச் சென்றடைய வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்துக்காகவே ஈகைப் பெருநாள் மலா் வெளியிடப்படுகிறது.

இதைப் படித்துவிட்டு இஸ்லாத்தில் உள்ள சிறப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதில், இஸ்லாமியா் மட்டுமல்லாது இஸ்லாமியா் அல்லாதவா்களும் சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளனா். தமிழகத்தில் ஒவ்வொரு இஸ்லாமியரும் குறைந்தபட்சம் 10 மலா்களாவது வாங்கி அவற்றை இஸ்லாமியா் அல்லாத தங்களது நண்பா்களுக்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும். இதன்மூலம் இஸ்லாம் குறித்த புரிதலை அவா்களுக்கு ஏற்படுத்தலாம்.

பருவ இதழ், மாத இதழ், நாளிதழ் என எதுவாக இருந்தாலும் தீபாவளி மலரைப் போன்று ஈகைப் பெருநாள் மலரையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அது அனைவராலும் படிக்கப்பட வேண்டும். இதை ஆண்டுதோறும் வெளியிட வேண்டிய மலராக ஒவ்வொரு பத்திரிகையும் கொண்டு வரும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றாா் அவா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset