நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டப்பகலில் கள்ளக்காதல்: மனைவியை கையும் களவுமாகப் பிடித்த கணவன்

மலாக்கா:

மலாக்கா, க்ருபோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது மனைவி வேறொரு ஆடவருடன் இருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த கணவர், அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மலாக்கா மாநில இஸ்லாமிய சமயத் துறை நடத்திய சோதனையின்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கணவர், தனது மனைவியின் செயலால் கடும் கோபமடைந்து, "நான் உன்னை அடிக்காமல் இருப்பதே பெரிய விஷயம், இன்னும் என்னிடம் வாதாடுகிறாயா?" என்று ஆவேசமாகக் கத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அங்கிருந்த அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலைத் தவிர்த்தனர்.

முன்னதாக, அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டில் இருப்பதை ஒரு மதகுரு கண்டுபிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான காணொலியை வெளியிட்ட அதிகாரிகள், இது எவரையும் அவமானப்படுத்துவதற்காக அல்ல என்றும், சமூகத்தில் இத்தகைய தவறான செயல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பகிரப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஜோடி மீது 1991-ம் ஆண்டு மலாக்கா மாநில ஷரியா குற்றச் சட்டத்தின் பிரிவு 53-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 3,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலதிக விசாரணைக்காக இருவரும் சமயத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset