நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்கள் தொடர்ந்து 'புடி95' திட்டத்தின் பயன்களைப் பெறுவது உறுதி: டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அறிவிப்பு

புத்ராஜெயா: 

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், மலேசிய மக்கள் தொடர்ந்து 'புடி95' (BUDI95) திட்டத்தின் பயன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசாங்கம் மாதம் 3.2 பில்லியன் ரிங்கிட் எரிபொருள் மானியத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. 

உலகளாவிய விலை ஏற்றம் அரசாங்கத்தின் மானியச் செலவினங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, பெட்ரோல் மானியம் முன்னதாக இருந்த 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து சுமார் 2 பில்லியன் ரிங்கிட்டாகவும், டீசல் மானியம் சுமார் 1.2 பில்லியன் ரிங்கிட்டாகவும் அதிகரித்துள்ளது. 

மக்களின் வாழ்க்கைச் செலவினத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவது அவசியம் என்பதால், விலையேற்றத்தைத் தடுத்து மானியத்தைத் தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 'மடானி' (MADANI) அரசாங்கம் மேற்கொண்ட நிதி சீர்திருத்தங்கள், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த கூடுதல் சுமையை அரசாங்கத்தால் தாங்க முடிகிறது என்று அவர் விளக்கினார். 

மேற்காசியப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சவால்கள், அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், 2025-ஆம் ஆண்டின் சிறப்பான பொருளாதார வளர்ச்சி மலேசியாவின் அடித்தளம் வலுவாக இருப்பதை நிரூபித்துள்ளது. இந்த வளர்ச்சி வேகம் நடப்பு ஆண்டிலும் தொடரும் என நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset