நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்

தெஹ்ரான்: 

அமெரிக்கா–இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெடித்த போருக்கு முடிவு காண ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

அல் ஜசீரா செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்தல், இழப்பீடு வழங்குதல், எதிர்காலத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதம் வழங்குதல் ஆகியவை அந்த மூன்று நிபந்தனைகள் ஆகும்.

அந்த அறிக்கையின் படி, பெசெஷ்கியான் பிராந்திய அமைதிக்கான தனது உறுதியையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதை அவர் ரஷ்யா தலைவர் விளாதிமிர் புதின், பாகிஸ்தான் தலைவர்களுடன் நடைபெற்ற உரையாடல்களில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெசெஷ்கியான் சர்வதேச சமூகங்கள் அமெரிக்க, இஸ்ரேல் ஆட்சி ஈரான் மீது மேற்கொண்டதாக அவர் கூறும் “குற்றவியல் தாக்குதலை” சர்வதேச மேடைகளில் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிபர் பெசெஷ்கியான், ரஷ்யா தலைவர் விளாதிமிர் புதின் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதாகவும், அதில் இருநாட்டு ஒத்துழைப்பு, பிராந்தியத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

இரு அதிபர்களும் பரஸ்பர நலன்கள் தொடர்பான பல விடயங்களைப் பற்றி கருத்து பரிமாறிக் கொண்டதுடன் தெஹ்ரான், மாஸ்கோ இடையிலான உயர் மட்ட ஆலோசனைகலையும் ஒருங்கிணைப்புகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் உருவாகியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் தெற்கு எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்த முக்கிய கடல் பாதையில் எண்ணெய் கப்பல்களின் இயக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. தெஹ்ரான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து இராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தில் ஏற்பட்ட தடங்கல்கள், எண்ணெய், எரிவாயு வழங்கலில் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் காரணமாக உயர்ந்துள்ளது.

 மேலும் வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்கள் அமெரிக்காவின் தாக்குதல்மிகு நடவடிக்கைகளால் ஏற்பட்டவை என்றும், இந்தச் சூழ்நிலைக்காக சர்வதேச சமூகம் அமெரிக்காவை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அராக்சி வலியுறுத்தினார்.

மேலும், கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் தெற்கிலுள்ள மினாப் நகரில் அமைந்துள்ள ‘ஷஜரே தைய்யிபெ’ பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தாக்குதலில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 170 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

“அமெரிக்கா, இஸ்ரேல் ஆட்சியின் தாக்குதல்மிகு நடவடிக்கைகள், ஐக்கிய நாட்டு சபை சாசனத்தின் அடிப்படை கொள்கைகள், சர்வதேச சட்டங்களை மீறுகின்றன.

“இந்த வெளிப்படையான இராணுவ தாக்குதலையும் சட்ட மீறலையும் அனைத்து அரசுகளும் கண்டிக்க வேண்டிய பொறுப்பு உடையவை,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset