நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் கடத்தல் அபாயம்: எல்லை பகுதிகளில் KPDN தீவிர கண்காணிப்பு

கோலாலம்பூர்: 

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் வழங்கல் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், எரிபொருள் கடத்தலைத் தடுக்க மலேசியாவின் எல்லைப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகக் கிளாந்தான் மாநிலத்தில் மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள 48 பெட்ரோல் நிலையங்கள் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவீனங்களின் அமைச்சகத்தின் (KPDN) தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளன என்று கிளாந்தான் KPDN துணை இயக்குநர் அஸ்வாடி ஜஃபார் தெரிவித்தார்.

“பெங்காலான் குபோர், ரந்தாவ் பஞ்சாங், புக்கித் புங்கா போன்ற பகுதிகள் எல்லைக்கு மிகவும் அருகில் உள்ளதால், இவை எரிபொருள் கடத்தலுக்கான வழிகளாக பயன்படுத்தப்படலாம் என்ற அபாயம் காரணமாக அடிக்கடி கண்காணிக்கப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

 கண்காணிப்புடன் கூடுதலாக தொடர்ந்து ரோந்து பணிகள், தகவல் சேகரிப்பு, பிற அமைப்புகளுடன் இணைந்த சிறப்பு நடவடிக்கைகளையும் KPDN மேற்கொண்டு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

“எல்லைப் பகுதிகளில் உள்ள நிலையங்கள் பெருமளவில் எரிபொருள் வாங்கி கடத்துவதற்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைக்கு இது தீர்வாகும்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக எல்லைப் பகுதிகளில் எரிபொருள் தேவைகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இது கவனமாகக் கண்காணிக்கப்படாவிட்டால் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும். அதனால் கிளாந்தான் KPDN கண்காணிப்பை மேலும் கடுமையாக்கி விதிமுறைகளை மீறும் எவரிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், பெரிய அளவில் அல்லது சந்தேகத்திற்கிடமான எரிபொருள் வாங்குதல்கள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெர்லிஸ் மாநிலத்தில், பாடாங் பெசார் ICQS வளாகம் அருகிலுள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், மானிய எரிபொருள் வாங்குவது உள்ளூர் மக்களே என்பதை உறுதி செய்ய அடையாள அட்டையின் (IC) மூலம் விற்பனை கண்காணிக்கப்படுவதாகத் தெரியவந்தது.

அண்டை நாட்டிற்கு கடத்தலைத் தடுப்பதற்காக, அந்த இரண்டு நிலையங்களிலும்  கூடுதல் கொள்கலன்களில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset