நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர் 

மூவார்: 

போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டிய ஒருவரின் பிக்அப் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுநரும் பின்னிருக்கையில் இருந்தவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று லெங்கா, ஜாலான் ரென்ச்சோங் பகுதியில் நடந்தது.

இரவு 8.42 மணியளவில் நடந்த இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிய 47 வயதான நோர்மன் அஹமட்டுடன் பின்னிருக்கையில் இருந்த 77 வயதான சா’த் காசிம் ஆகியோர் சுல்தானா பாத்திமா மருத்துவமனையில் (HPSF) சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தனர்.

நோர்மன், சா’த்தின் அண்ணன் மகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தலை, உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

39 வயதான ஆடவர் ஒருவர் ஓட்டிய 'ஃபோர்டு ரேஞ்சர்' பிக்அப் வாகனம் ஒரு வளைவு வழியாக செல்லும் போது எதிர் பாதையில் நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று மூவார் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி கமிஷனர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸீஸ் தெரிவித்தார்.

“விபத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த வாகன ஓட்டுநரைப் போலிசார் சோதனை செய்தபோது, 5.15 கிராம் எடையுள்ள 20 எரமின் 5 மாத்திரைகள், 0.39 கிராம் ஷாபு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

“மேலும் சிறுநீர் பரிசோதனையில் அந்த நபர் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மேலதிக நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தையடுத்து, 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 44 (1) (a) கீழ், போதைப்பொருள் உட்கொண்டு  வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“சந்தேக நபர் தற்போது மூவார் மாவட்ட காவல் துறை தலைமையக (IPD) சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset