நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN 

கோலாலம்பூர்: 

தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, நாட்டின் நிலைத்தன்மையையும் இறையாண்மையையும் வெளிநாட்டு தாக்கங்களிலிருந்து பாதுகாக்க, இரு தரப்பு அரசியல் ஒற்றுமை அவசியம் என தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்காலம் முழுமையாக மக்களும் அரசும் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும் எனவும் அது வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்படக் கூடாது என்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நூர்ஷிர்வான் சைனால் ஆபிடின் வலியுறுத்தினார்.

உள்நாட்டு வலிமையை மேலும் வலுப்படுத்துவதுதான் முக்கியமானதாகும் என்றும், உள்ளூர் அரசியல் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்ய முயல்வதைத் தடுக்க அது அவசியம் என்றும் அவர் கூறினார்.

“சமூகத்தின் அனைத்து நிலைகளிலும், குறிப்பாக அரசியல் தலைவர்களிடையே, பாதுகாப்பு விவகாரங்கள் அரசியலாக்கப்படக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்,” என்று அவர் நேற்று இரவு RTM-ல் ஒளிபரப்பான 'Bicara Naratif: Dimensi Baharu Keselamatan Negara' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இன்றைய கூட்டாட்சி அரசின் அணுகுமுறை கட்சித் அரசியலைத் தாண்டியதாக உள்ளது என்பதை வலியுறுத்திய ராஜா நூர்ஷிர்வான், எல்லை மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளில் MKN, கிளந்தான் மாநில அரசுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

அதன்படி, சட்டவிரோத எல்லை தளங்களை மூடுவதும், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஒன்றுபடுவது சாத்தியமற்றது அல்ல என்பதை இது நிரூபிக்கிறது,” என்றார் அவர்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பங்கு குறித்து பொதுமக்களிடையே உருவாகும் கருத்து தொடர்பாக, COVID-19 தொற்றுநோய் காலத்தை ஒப்பிடுகையில் பாதுகாப்பு நிர்வாக பணிகள் சலிப்பானதாக சிலர் நினைக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், உலகளாவிய மோதல்கள், குறிப்பாக மத்திய கிழக்கு பதற்றம் போன்றவை நாட்டின் வர்த்தகம், பொருளாதார மதிப்புச் சங்கிலியைப் பாதிக்காமல் இருக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தினசரி நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்றும், அவை பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset