நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரேசில் தென்கிழக்கில் நிலச்சரிவால் 55 பேர் பலி

ஜூயிஸ் டி ஃபோரா:

பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் இடைவிடாது பெய்து வரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 13 பேரை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை முதல் பெய்த கனமழையால் ஜூயிஸ் டி ஃபோரா, உபா நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

சிலர் தங்கள் வீடுகளில் விட்டுச் சென்ற பொருட்கள், செல்லப்பிராணிகளை மீட்க மீண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.

மினாஸ் ஜெரைஸ் மாநில ஆளுநர் ரோமியூ ஜெமா, பேரிடர் தடுப்பு செலவினங்கள் குறைக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர் தடுப்பு நிதி 95 விழுக்காடு குறைக்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை அடுத்து, அவர் சமூக ஊடக தளத்தில் விளக்கம் அளித்தார்.

இந்தச் சம்பவம், பிரேசிலில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் கடுமையான வானிலை பேரழிவுகளின் இன்னொரு எடுத்துக்காட்டாகும். விஞ்ஞானிகள் இதனை உலக வெப்பமயமாதலின் நேரடி விளைவாகக் குறிப்பிடுகின்றனர்.

வானிலை நிபுணர் கார்லோஸ் நோப்ரே கூறுகையில், மிகச் சூடான அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் குளிர்காற்று அமைப்பே இந்த அபூர்வமான கனமழைக்குக் காரணம் என்றார். இதனால் பெரிய மழை மேகங்கள் உருவாகி, பரவலான கனமழை பெய்ததாக அவர் விளக்கினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், தென் பிரேசிலில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இது நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset