நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறந்த பெண்ணின் மேலும் இரண்டு உடற்பாகங்களைப் போலிஸ் தேடுகிறது

கோத்தா கினாபாலு:

கடந்த வியாழக்கிழமை 'Indah Permai' பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களில் சில கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் கிடைக்காத இரண்டு உடல் பாகங்களைப் போலிஸ் தீவிரமாக தேடி வருகிறது.

மங்காத்தால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் அரிவாளால் தாக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்பட்டிருக்க்கூடும் என சபா காவல் ஆணையர் டத்தோ ஜவுதே டிகுன் தெரிவித்தார்.

எனினும், சந்தேக நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், முழுமையான விசாரணை இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில், உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை துல்லியமாகத் தெரிவிக்க முடியவில்லை என்றார் அவர்.

“இன்னும் கிடைக்காத இரண்டு உடல் பாகங்களையும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அரிவாளையும் போலீஸ் தேடி வருகிறது.

“இந்தத் தேடுதல் பணியில் தடயவியல் பிரிவு, போலிஸ் நாய் படை (K9) பிரிவைச் சேர்ந்த போலீசார், சபா காவல் தலைமையகத்தின் கீழ் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சில இடங்களில் பணியாற்றி வருகின்றனர்,” என்று அவர் இன்று தெரிவித்தார்.

நேற்று, பாதிக்கப்பட்டவரின் மகன் 'TikTok' நேரலை மூலம், தாயின் உடல் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், உடல் பாகங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறினார்.

“இதுவரை கிடைக்காதவை இடது காலும் வலது கையும்,” என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வழக்கின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறலாம் என்று மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

மேலும், சந்தேக நபரின் உடல்நிலை அனுமதிக்கும் நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை ஆவணங்கள் முழுமைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாகத் தகவல் உள்ளவர்கள், கோத்தா கினபாலு மாவட்ட காவல் நிலையத்தை 088-529222 என்ற எண்ணிலோ அல்லது ஹாட்லைன் 019-2182728 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, நேரடியாக விசாரணை அதிகாரியிடமோ தகவல் வழங்கலாம் என்றார்.

இந்த வழக்கு, கொலை குற்றச்சாட்டின் கீழ், குற்றச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset