நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதல் முறிவின் கோபம்: தீ வைத்து கொளுத்திய முன்னாள் மனைவியின் வீடு

ஜகார்த்தா: 

இந்த மாத தொடக்கத்தில், இந்தோனேசியாவின் பனாருகானில் அமைந்துள்ள கம்புங் பரெய்யான், தேசா சும்பர்கோலாக் பகுதியில், தனது முன்னாள் மனைவியின் வீட்டைத் தீ வைத்து எரித்ததாகச் சந்தேகிக்கப்படும் 68 வயது முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘எம்’ (M) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தச் சந்தேகநபர், 2025 மே மாதத்தில் தனது மனைவியைப்  பிரிந்த  மனவேதனையிலும் கோபத்திலும் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், முதலில் சாதாரண தீ விபத்து என கருதப்பட்டதாகச் சிடுபோண்டோ மாவட்ட காவல் துறையின் குற்றப்புலனாய்வு தலைவர் (Kasat Reskrim) ஏகேபி அகுங்க் ஹர்தவான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, சந்தேகநபருக்குச் சொந்தமான ஹோண்டா வகை மோட்டார் சைக்கிள், பை, தொப்பி ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

“கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்னை அடிக்கடி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்பெண் தனது தாயின் வீட்டில் தங்கி வந்தார்,” என்று அகுங்க் ஹர்தவான் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபர் இந்தச் செயலைச் செய்ததாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் சுமார் 50 மில்லியன் ரூப்பியா (RM11,604) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர், கைது செய்யப்பட்டச் சந்தேகநபர் தற்போது விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு, இந்தோனேசிய தண்டனைச் சட்டம் (UU No.1 Tahun 2023) பிரிவு 308 (1)ன் கீழ், பொதுமக்களின் பாதுகாப்பைப்  பாதிக்கும் வகையில் திட்டமிட்டு தீ வைப்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset