நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

கிக் தொழிலாளர் சட்டம் 2025 (சட்டம் 872) இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இச்சட்டம் கிக் தொழிலாளர்களின் பணி நிலையை அங்கீகரிப்பதோடு, அவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான தெளிவான சட்டக் கட்டமைப்பை வழங்கும்.

நாட்டின் மொத்த உழைப்புச் சக்தியில் 21.8 விழுக்காடாக இருக்கும் சுமார் 3.45 மில்லியன் முறைசாரா துறைத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சின் உறுதிப்பாட்டை இந்நடவடிக்கை காட்டுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், லிண்டுங் 24 மணிநேரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு ஏற்படும் விபத்துகள் உட்பட, வேலைக்காலம் முழுவதும் தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

யாரும் கைவிடப்படக் கூடாது என்ற கொள்கையே நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு கொள்கைகளுக்கு அடிப்படையாகும்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் நல்வாழ்வு, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் இன்று மக்களவையில் மாமன்னரின் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் கூறினார்.

பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், கட்டாயமாக்கப்படாத துறைகளில் முதன்முறையாகப் பதிவு செய்பவர்களுக்கு 'லிண்டுங் கெண்டிரி' திட்டத்தின் கீழ் 70 விழுக்காடு பங்களிப்பு மானியத்தையும், இரண்டாவது ஆண்டில் சுயமாகப் புதுப்பிப்பவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தையும் அரசாங்கம் வழங்குகிறது என்று டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset