நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது

ஜெனீவா:

கடந்த ஜனவரியில் நிப்பா வைரஸால் பாதிக்கப்பட்டு வங்காள தேசத்தின் வட பகுதியில் ஒரு பெண் உயிரிழந்ததை உலகச் சுகாதார மையம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது.

வங்காள தேசத்தில் நிப்பா வைரஸ் சம்பவங்கள் ஆண்டுதோறும் பதிவாகி வருகின்றன. அண்டை நாடான இந்தியாவில் இரண்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் பல விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

40 முதல் 50 வயதுக்கிடைப்பட்ட அந்த பெண்ணுக்கு ஜனவரி 21ஆம் தேதி காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றியதுடன் அதிக உமிழ்நீர் சுரப்பு, மூச்சுத் திணறல், மயக்கம் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளன என்று WHO தகவல் வெளியிட்டிருந்தது.

அவர் ஒரு வாரத்திற்குப் பிறகு உயிரிழந்தார். அதன்பின் ஒரு நாள் கழித்து, அவருக்கு நிப்பா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த பெண் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் சமைக்கப்படாத பனைச் சாறு குடித்ததாக WHO தெரிவித்துள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த 35 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அனைவருக்கும் நிப்பா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தற்போது மேலும் எந்த சம்பவமும் கண்டறியப்படவில்லை,” என்று WHO தெரிவித்தது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிப்பா வைரஸ் சம்பவங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் விமான நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச அளவில் நோய் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளதாகவும், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பயணம் அல்லது வர்த்தகத்திற்கு எந்த தடையும் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் WHO கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

2025 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்ட நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போது நிப்பா வைரஸ் தொற்றிற்கு குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset