செய்திகள் மலேசியா
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
காஜாங்:
கடந்த வெள்ளிக்கிழமை, தனது முன்னாள் காதலியையும் அவரது வயதான தாயாரையும் தீ வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, 40 வயது ஆடவர் மீது கொலை முயற்சி, தீ வைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டுகள் காஜாங் அமர்வு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவுள்ளன.
ஆறு நாள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காஜாங் மாவட்ட காவல் தலைமையகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகநபரை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
பழுப்பு நிற சட்டையும் கருப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்த அந்த நபரின் கைகளில் தீக்காயங்களின் அடையாளங்கள் காணப்பட்டன. அவருக்கு கைவிலங்குகள் போடப்பட்டிருந்தன.
அந்த ஆடவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி குற்றம் சுமத்தப்படவுள்ளது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம். பாதிப்பு தீவிரமானதாக இருந்தால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் நோக்கில் தீ வைத்த குற்றத்திற்காகக், குற்றவியல் சட்டம் பிரிவு 435-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு அதிகபட்ச தண்டனையாக 14 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட ஆடவர் அந்த பெண், அவரது தாயாரின் மீது பெட்ரோல் ஊற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், பெண்ணின் உடைமைகளுக்குத் தீ வைத்து, அவரது காரையும் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும், இதனால் வீட்டு முன்பகுதி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் தலைமுடி உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டதுடன் அந்த பெண்ணின் செல்லக் கோழியையும் சந்தேகநபர் அரிவாளால் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர், கைது தவிர்க்கும் முயற்சியில், அந்நபர் பண்டார் சௌஜானா புத்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருந்தபோது அதே நாளில் கைது செய்யப்பட்டார்.
தகவலின்படி, அந்த பெண் ஒரு மாதத்துக்கும் முன்பே அவருடனான உறவை முறித்துவிட்டார். அதன் பின்னர் சம்பவம் நடைபெறும் வரை அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 6:50 pm
மலேசியாவில் பதிவான முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்
February 5, 2026, 5:49 pm
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
