நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சீர்மிகு சிங்கப்பூரில் அன்று தமிழ் வளர்த்தோர், இன்று வளர்ப்போர்: முஹம்மது பிலால்

கொழும்பு:

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவரும் தொழிலதிபருமான அ.முஹம்மது பிலால் ‘சீர்மிகு சிங்கப்பூரில் அன்று தமிழ் வளர்த்தோர், இன்று வளர்ப்போர்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற ‘இலக்கியக் களம்’ நிகழ்ச்சியிலும் மறுநாள் வலம்புரி கவிதா வட்டத்தின் 118ஆவது அரங்கிலும் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூர், இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ரீதியிலான தமிழ் உறவுகளையும் மொழி வளர்ச்சியையும் பறைசாற்றும் தகவல் செறிவுமிக்க நிகழ்ச்சிகளாக அமைந்தன. 

நிகழ்ச்சியில்  பிலால், சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட அறைகூவல்களையும் அது தமிழை வளர்த்த விதத்தையும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், சமூக மன்றங்களில் கல்வியாளர்கள், செய்தியாளர்களும் அன்று அமைத்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் சிங்கப்பூரில் தமிழ் இன்றும் உயர கோபுரமாக நிற்கிறது.

சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகைத் துறையின் வரலாற்றை விளக்கிய அவர், 1887ல் மகுதூம் சாகிப் தொடங்கிய சிங்கை நேசன் முதல் 1935ல் தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு வரை பல இதழ்களைத் பிலால் பட்டியலிட்டார்.

சிங்கப்பூரில் அன்று தமிழ் வளர்த்தோர் குறித்த தகவல்களை திரட்டியபோது, திருக்குறளை மலாய் மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் புகாரி, திருக்குறள் ஆசிரியர் பாவாடை சாமி , தமிழவேள் கோ.சா.வோடு தன்னலமற்று பயணித்த பக்ருத்தீன் சாஹிப், சமூகத் தலைவர் அ.ந.மைதீன் ஆகியோர் பற்றிய அரிய தகவல்களை முன்னாள் வானொலி, தொலைக்காட்சி மூத்த ஒலிபரப்புச் செய்தியாளர், படைப்பாளர் செ.ப.பன்னீர்செல்வம் பகிர்ந்து உதவியதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் இருமொழிக் கொள்கையினால் தமிழ் பெற்றுள்ள முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர், சிங்கப்பூரில் தமிழ் செழித்து வளரவும் செறிவோடு நிலைத்திருக்கவும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக்குழு மற்றும் தேசிய கலைகள் மன்றத்தின் தங்கமுனை விருது மூலம் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சவாலான தமிழ்ப் பணிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தொடக்கக் காலத்திலிருந்து எம்.கே.ஏ.ஜப்பார் முதல் இன்றைய துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், டாக்டர் ஹமீது ரசாக் ஆகியோர் தமிழில் பேசுவது குறித்தும் திரு பிலால் தமது உரையில் பகிர்ந்துகொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset