நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை மின் படிக்கட்டு சர்ச்சை; இந்து ஆலயங்களின் பதிவைத் தவறாகப் புரிந்துகொண்டதின் விளைவா?: இராமசாமி

கோலாலம்பூர்:

பத்துமலை மின் படிக்கட்டு சர்ச்சை இந்து ஆலயங்களின் பதிவைத் தவறாகப் புரிந்துகொண்டதின் விளைவாக ஏற்பட்டுள்ளது என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.

நாட்டில் இந்து ஆலயங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்ற உண்மையை சிலாங்கூர் மாநில அரசு முழுமையாகப் புரிந்திருந்தால், பத்துமலை மின் படிக்கட்டு தொடர்பான சர்ச்சை ஒருபோதும் உருவாகியிருக்காது.

இந்து கோவில்கள் பல்வேறு சட்ட கட்டமைப்புகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. 

அவற்றில் டிரஸ்ட் (அறக்கட்டளை), சங்கப் பதிவாளர் (ஆர்ஓஎஸ்), பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உள்ளிட்டவை அடங்கும்.

இந்து ஆலயங்கள் அனைத்தும் கட்டாயமாக ஆர்ஓஎஸ்சின்கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இல்லை.  பல ஆலயங்கள்  ஆர்ஓஎஸ்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வணிக மையத்திற்கான நில விண்ணப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய எஸ்கலேட்டர் கட்டுமான விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலின் மூல காரணம், அனைத்து இந்து ஆலயங்களும் ஆர்ஓஎஸ்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற சிலாங்கூர் மாநில அரசின் தவறான முன்கணிப்பே ஆகும். 

இது திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான நம்பிக்கை.

துரதிருஷ்டவசமாக, பத்துமலை கோவில் ஆர்ஓஎஸ்சில் பதிவு செய்யப்படாததே இந்த பிரச்சினையின் அடிப்படை காரணம் என்று மாநில ஆட்சிக் குழு கருதுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவால் உலகப் புகழ்பெற்ற பத்துமலை இந்து ஆலயம், 1930-களிலேயே ஒரு டிரஸ்ட் (அறக்கட்டளை) ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த கோவிலின் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா ஆவார். தற்காலிக ஆக்கிரமிப்பு அனுமதி (Temporary Occupation Licence – TOL) விண்ணப்பத்தின் தன்மை,  அதில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் காரணமாக, டான்ஸ்ரீ நடராஜா தனது பெயரை தனிப்பட்ட நபராக அல்லாமல், டிரஸ்டின் தலைவர் என்ற நிலைமையில் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

டிஓஎல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அதன் தகுதி இல்லாமையால் அல்ல. மாறாக, மாநில அரசின் குறுகிய, கட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்ப நிபந்தனைகளுக்கு அது பொருந்தாததாலேயே.

இந்த சட்ட அல்லது அரசியலமைப்புச் சார்ந்த விஷயத்தில்தான், மாநில அரசின் விண்ணப்ப விதிகளை ரத்து செய்யக் கோரி, பத்துமலை கோவிலின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்தரவை நாடி வருகின்றனர் என நான் கருதுகிறேன்.

அந்த கோவில் அல்லது டிரஸ்டிற்கு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் நான் அறிந்துள்ளேன்.

நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கோவிலை ஆர்ஓஎஸ்சின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, அரசியலமைப்புக்கு முரணானது என நான் நம்புகிறேன்.

மாநில அரசு தனது சட்ட ஆலோசகர்களின் கருத்தை பெறுவதற்குப் பதிலாக, கோவில் டிரஸ்டின் விண்ணப்பத்தை தாமதப்படுத்தியுள்ளது.

பத்துமலை கோவில் டிஓஎல்க்கு விண்ணப்பிப்பதற்கு முன் ஆர்ஓஎஸ்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தவறான எண்ணமே, சட்டத் துறைக்கு இருந்திருக்கலாம்.

இந்த மின்படிக்கட்டு, தைப்பூசத்தின் போது திரளாக கூடும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ளது. இது எந்தவிதத்திலும் தனியார் திட்டம் அல்ல.

நாட்டிலுள்ள இந்து பக்தர்களுக்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த எஸ்கலேட்டர் கட்டுமானம் விரைவில் ஏற்படுவதற்காக, இந்த விவகாரத்தில் நல்லுணர்வு மேலோங்கும் என்று நான் நம்புகிறேன் என இராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset