
செய்திகள் சிந்தனைகள்
ஈமானில் முழுமை பெற்று, வயதில் மூத்தவராக இருந்தாலும் தகுதியும் திறமையும் இல்லையேல் அவர் தலைமைக்கு தகுதியற்றவரே: வெள்ளிச் சிந்தனை
இஸ்லாத்தைப் பொறுத்தவரை தலைமைக்குத் தேவை தகுதி மட்டுமே. என்னதான் ஒருவர் ஈமானில் முழுமை பெற்று, வயதில் மூத்தவராக இருந்தாலும் தகுதியும் திறமையும் இல்லையேல் அவர் தலைமைக்கு தகுதியற்றவரே.
அதனால்தான் நபிகளார் கூறினார்கள்:
"எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்” (புகாரி)
அபூதர் (ரலி). ஆரம்பகால முஸ்லிம். ஐந்தாவதாக இஸ்லாத்தை ஏற்றவர், பேரறிஞர், இறையச்சம் மிக்கவர், மாபெரும் அழைப்பாளர். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வளவு சிறப்புகள் இருந்தும், "இறைத் தூதரே! எனக்கும் ஏதாவது பொறுப்பு தாருங்கள்’’ என்று அவர் கேட்டபோது,
"அபூதர்! நீர் பலவீனமானவர். பொறுப்புக்குத் தகுதி வேண்டும். எனவே வேண்டாம்’’ என்றார்கள் நபிகளார். (முஸ்லிம்)
இது தொடர்பாக இமாம் அத்தஹபி கூறுகின்றார்:
அபூதர் (ரலி) உடல் வலிமையும் துணிச்சலும் மிக்கவர், மறுமை மட்டுமே அவரது லட்சியம். தலைமைக்கு தொலை நோக்குப் பார்வையும் உத்தியும் தேவை. அபூதர்ரிடம் அது கிடையாது. ஒரு பணக்கார அநாதையின் செல்வத்தை அவரிடம் ஒப்படைத்தால் அதை நல்ல முறையில் செலவு செய்து அந்த அநாதையை அவர் ஏழையாக்கிவிடுவார். (சியரு அஃலாமுந் நுபலாவு)
அதேவேளை பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய காலித் பின் வலீத் (ரலி) திறமையும் தகுதியும் மிக்கவராக இருந்தார். எனவே தளபதிப் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் சிறந்த தலைமை குறித்து கேட்கப்பட்டது:
”ஒருவர் திறமை மிக்கவர், ஆனால் நல்லவரல்ல. இன்னொருவர் திறமையற்றவர், ஆனால் நல்லவர். இவ்விருவரில் தலைமை பொறுப்புக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?”
அதற்கு இமாம்: ”ஒருவரது பாவம் அவரது சொந்த விவகாரம். ஆனால் அவரது திறமை மூலம் மக்களுக்கு நன்மை விளையும்.
அவ்வாறே ஒருவரது நன்மையும் அவரது சொந்த விவகாரம்தான். ஆனால் அவரது பலவீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே நல்லவராக இல்லாவிட்டாலும் திறமையும் வலிமையும் மிக்கவரையே தலைமைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்’’. (அஸ்ஸியாஸா அஷ்ஷறஇய்யா)
அதனால்தான் வலிமையும் தகுதியும் மிக்கவரை தலைமைக்குத் தேர்ந்தெடுக்குமாறு அல்குர்ஆன் கூறுகிறது:
”எவர் வலிமையும் நம்பிக்கையும் (தகுதியும்) உரியவராய் இருக்கிறாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்துவதற்கு மிகவும் சிறந்தவர்’’ (28:26)
'ரஜ்லுன் சாலிஹுன்’ என்றொரு வாசகம் அரபியில் உண்டு. இதன் பொருள், ஸாலிஹான மனிதர் என்பதோ, நல்ல மனிதர் என்பதோ அல்ல.
மாறாக தகுதியும் திறமையும் மிக்க மனிதர் என்பதாகும். பயன்மிக்க, தகுதிமிக்க, குறிப்பிட்ட பணிக்குப் பொருந்திப்போகிற மனிதர் என்பதுதான் இதன் நோக்கம். அந்த மனிதரையே 'சாலிஹான மனிதர்’ என்பார்கள்.
தகுதியும் இன்றி, திறமையும் இன்றி வெறி பிடித்தவர் போன்று தலைமைக்குப் போட்டியிடும் நபர்களால் குடிமக்களுக்கு என்றும் ஆபத்துதான்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm