நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏழை இந்திய மாணவர்களின் உயர் கல்வி பிரச்சினைக்கு தீர்வே இல்லையா?; மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையை கொடுப்பதா?: டத்தோ நெல்சன் கேள்வி

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் ஏழை இந்திய  மாணவர்களின் உயர் கல்வி பிரச்சினைக்கு தீர்வே இல்லையா என மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேள்வி எழுப்பினார்.

மஇகா கல்வி குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் முடித்த மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இம்முறை எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசனில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கே அரசாங்க பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லை.

அப்படியே கிடைத்தாலும்  மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையில் பயில வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏன் அவர்களே தற்போது தனியார் பல்கலைக்கழகங்களை அடையாளம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது நமது இந்திய மாணவர்களுக்கு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

காரணம் பணம் இல்லாத பட்சத்தில் தான் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.

அங்கும் தங்கள் கனவை அடைவதற்கு முட்டுக் கட்டை போட்டால் அம்மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மஇகா பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு தருகிறது.

ஆனால் இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆக அரசாங்க பல்கலைக்கழகங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

தேர்வு செய்யும் துறைகள் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு மடானி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் யூபியூ மாணவர்கள் தேர்வு குழுவில் இன அடிப்படையிலான உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

இதன் மூலம் எந்தவொரு பாராபட்சமும் இன்றி தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த உயர் கல்வி பிரச்சினை குறித்து பல ஆண்டுகளாக நாங்கள் குரல் கொடுத்து தான் வருகிறோம்.

ஆனால் இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று மஇகா கல்விக் குழுத் தலைவருமான டத்தோ நெல்சன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset