நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்

சென்னை:

தமிழ் இலக்கியம், திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்டம்பர் 5) மாலை காலமானார். அவருக்கு வயது 90. 

கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்ட பூவை செங்குட்டுவன், ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், தனிப்பாடல்கள், திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பலவற்றை  எழுதியுள்ளார். 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இறைவன் படைத்த உலகை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், திருப்புகழைப் பாட பாட, கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். 

இறுதிவரை இடைவிடாது எழுதி வந்த இவரது இறுதி நூலான 'வாழ்க்கை எனும் நேர்க்கோடு' கடந்த சில தினங்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ் பி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன், கவிஞர் அறிவுமதி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையிலும் பூவை செங்குட்டுவன் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

அய்யன் வள்ளுவனின்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும்
எளிய நடையில்
இசைப்பாடலாக (133 பாடல்கள்)
தந்தவர்.இவர் ஒருவரே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனை மனமுவந்து
பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடலை 
'குறள் தரும் பொருள்'
என்ற இசைப் பேழையாக
இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார், பத்திரிகைகள் பலவும் பாராட்டின.

கலைமாமணி (1980), கலைத்துறை வித்தகர் விருதான
கண்ணதாசன் விருது (1997), மகாகவி பாராதியார் விருது (2020) உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பூவை செங்குட்டுவன் பெற்றுள்ளார். 

பூவை செங்குட்டுவனுக்கு பூவை தயாநிதி மற்றும் எஸ் ரவிச்சந்திரன் ஆகிய மகன்களும், விஜயலட்சுமி மற்றும் கலைச்செல்வி ஆகிய மகள்களும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். பூவை செங்குட்டுவனின் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டார். பூவை செங்குட்டுவன் மனைவியின் தங்கை கணவர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் என்பதும் தங்கையின் மகன்கள் நடிகர் உதயா மற்றும் இயக்குநர் ஏ எல் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பூவை செங்குட்டுவன் உடல்
எண்-24, ஸ்ரீ வர்ஷினி லோட்டஸ் பிளாட், ராஜா தெரு, ரமணா நகர்
பெரம்பூர் சென்னை-600011
(பிருந்தா தியேட்டர் எதிரே) எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும். தொலைபேசி: 93821 79385

- நிகில் முருகன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset