
செய்திகள் சிந்தனைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
‘கையளவு உள்ளம் வைத்துக் கடல் போல் ஆசை வைத்து...” என்று பாடினார் கவியரசர்.
அலை அலையாய் பொங்கும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பலருடைய வாழ்வை அலைக்கழித்து விடுகின்றன.
அண்மையில் படித்த ஒரு செய்தி...
ஊரில் சொந்தமாய் ஒரு வீடு கட்டவேண்டும் என்று வளைகுடா நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்த ஒருவர், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கிறார்.
சொந்த வீடு எனும் இலட்சியம் தவிர வேறு எல்லாவற்றையும் மறந்தார். உழைப்பு...உழைப்பு..ஓவர் டைம் வேலை வேறு.
ஒரு வழியாக வீடு கட்டும் பணிகள் முடிந்து புதுமனைப் புகுவிழா நடக்க இருந்த நேரத்தில் அந்தச் செய்தி இடிபோல் வந்து இறங்கியது...
உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் வெளிநாட்டிலேயே இறந்துவிட்டார்.
பாடுபட்டுக் கட்டிய வீட்டில் அவருடைய இறந்த உடல் பாடையில் கொண்டுவந்து வைக்கப்பட்டது.
மனிதனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, மிகக் குறுகியதும்கூட.
இந்த உண்மையை மிக எளிமையான ஓர் எடுத்துக் காட்டு மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறு கற்களை எடுத்தார்கள்.
ஒரு கல்லை அருகில் எறிந்தார்...
மற்றொரு கல்லை சற்று தொலைவில் எறிந்தார்.
பிறகு தோழர்களை நோக்கி, “இந்த இரண்டு கற்களுக்குமுள்ள எடுத்துக்காட்டு என்ன என்று அறிவீர்களா?” என்று வினவினார்.
“இறைவனும் இறைத்தூதரும்தாம் அறிவார்கள்” என்று கூறினர் தோழர்கள்.
நபிகளார் கூறினார்:
“அங்கு தொலைவில் இருக்கும் கல் மனிதனின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் குறிக்கும்.
இங்கு அருகில் உள்ள கல் அவனுடைய ஆயுளைக் குறிக்கும்.
(ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கு முன்பே ஆயுள் முடிந்துவிடுகிறது)” என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி எண் 2789)
என்ன அழகான உவமை..!
அளவுக்கு மீறிய உலக மோகங்களில் மூழ்கி, இதயம் கல்லாய்ப் போனவர்கள் இந்த உன்னதமான நபிமொழியில் சொல்லப்பட்டுள்ள உவமையை ஆராய்ந்தால்-
இறுகிப் போன இதயக் கல்லும் உருகக் கூடும்.
“உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் இந்த உலகின் சிலநாள் வாழ்க்கைக்குரிய சாதனங்கள்தாம். ஆனால் இறைவனிடம் இருப்பதோ (மறுமை) சிறந்ததும் நிலையானதும் ஆகும். அது, நம்பிக்கை கொண்டவர்களாகவும் தங்கள் இறைவனை முழுவதும் சார்ந்தவர்களாகவும் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு உரியதாகும்.” (குர்ஆன் 42:36)
- சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm