
செய்திகள் மலேசியா
மலேசிய இந்தியர்களின் கல்வித் தந்தை டான்ஸ்ரீ எம்.தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
ஈப்போ:
தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழும் இக்காலகட்டத்தில், கல்வி மட்டுமே இந்திய சமூகத்தை இந்நாட்டில் காப்பாற்ற முடியும் என்ற உன்னத நோக்கத்தை கொண்டவர் மறைந்த டான்ஸ்ரீ எம்.தம்பிராஜா. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஸ்ரீ முருகன் நிலையத்தை உருவாக்கி இந்நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை அவரையே சாரும் என்று ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற டான்ஸ்ரீ எம்.தம்பிராஜாவின் இரங்கல் கூட்டத்தில் வழக்கறிஞர் எம்.மதியழகன் கூறினார்.
இந்நாட்டில் இந்திய சமுதாயத்தை படித்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் அதிகமான எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தால் ஸ்ரீ முருகன் நிலையம் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் பட்டணங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் படிவம் 6 ன் ஸ்ரீ முருகன் நிலைய வகுப்புகள் அமைக்க பெரும் பாடுபட்டு அதனை நிறுவியவர் என்றால் அது மிகையாகாது என்று அவர் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக படிவம் 6 பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நிலைப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கினார். அதன் பின், படிவம் 5 எஸ்.பி.எம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஸ்ரீ முருகன் நிலையம் உதவிகளை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து படிவம் 3 பின் யுபிஎஸ்ஆர் தேர்வை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தேசியப் பள்ளி மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
காலப்போக்கில் கல்வியையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைத்து மாணவர்களுக்கு தன்முனைப்பு சக்தியை உருவாக்கி தந்தவர் டான்ஸ்ரீ முனைவர் எம்.தம்பிராஜா. அதன் அடிப்படையில் கல்வி விரதம் போன்ற ஆன்மீக செயல்நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் வாயிலாக மாணவர்கள் நன்மை அடைய வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.
இந்நாட்டு இந்திய மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உழைத்தவர் அவர்தான். அதன் விளைவுதான் இன்று இந்நாட்டில் பல இந்திய குடும்பத்தில் மல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், அரசாங்க மற்றும் தனியார் துறையில் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளாக பணி்செய்து வருவதுதான் தக்க சான்று என்று அவர் பாராட்டினார்.
தம்முடைய மூன்று புதல்வர்களும் ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள்தான். தற்போது அம்மூவரும் மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் பொறியியலாளராக பணிபுரிந்து வருகின்றனர். நல்ல வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று வழக்கறிஞர் எம்.மதியழகன் கோடிக்காட்டினார்.
இந்நிகழ்வில் டான்ஸ்ரீ எம். தம்பிராஜாவின் கல்விச்சேவை குறித்து வருகையளித்த பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர். அத்துடன், ஸ்ரீ முருகன் நிலைய முன்னாள் மாணவர்களான ஆசிரியர் ரவீந்திரன் (தைப்பிங்), முனைவர் சேகர் நாராயணன்( ஈப்போ), ஆசிரியர் கருப்பண்ணன் (தங்காக் ஜோகூர்) தங்களின் கருத்துகளையும் பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் தற்போதைய ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் சுரேன் கலந்துகொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:44 am
சுகர் மம்மி மோசடி; இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல்: எச்சரிக்கும் போலிஸ்
August 16, 2025, 4:45 pm