நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் முக்கிய தகவல் உள்கட்டமைப்பு மீது இணையத் தாக்குதல்: தற்காப்பு அமைச்சர் சான் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரின் முக்கியத் தகவல் கட்டமைப்பைக் குறிவைத்து வெளிநாட்டு அரசு ஆதரவு பெற்ற இணையப் பாதுகாப்பு உளவுக் குழுவான UNC3886 தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்க சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகியவற்றைச் சேர்ந்த குறிப்பிட்ட சில பிரிவுகள் இடம்பெறுகின்றன.

இத்தகவலை தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வெளியிட்டார்.

லோயாங்கில் உள்ள செலாராங் முகாமுக்குச் சென்ற சான், 2,000க்கும் மேற்பட்ட தயார்நிலை ராணுவ வீரர்கள் அணிதிரட்டும் பயிற்சியைப் நேரில் பார்வையிட்டார்.

சிங்கப்பூர் ராணுவம் கையாள வேண்டி வரும் மிரட்டல்களில் இணையம் வழித் தாக்குதலும் ஒன்று என்பதை அமைச்சர் சான் சுட்டினார்.

இணையம் வழி தாக்குதலை எதிர்கொள்ளும் பிரிவுகள் பற்றிய மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

சிங்கப்பூரின் இணையக் கட்டமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு சிங்கப்பூர் ஆயுதப் படையின் மின்னிலக்க, உளவுத்துறைச் சேவைக்கு உரியதாகும்.

இது 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது.

தற்காப்பு அமைச்சையும் சிங்கப்பூர் ஆயுதப் படையையும் இணையம் வழி மிரட்டல்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தற்காப்பு இணையத் தளபத்தியத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இதற்கிடையே, தற்போது நடந்துவரும் இணையம் வழித் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்படுகிறது என்பதை சிங்கப்பூரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டு அரசு ஆதரவு பெற்ற இணையப் பாதுகாப்பு உளவுக் குழுவின் அடையாளம் வெளியிடப்பட்டதாக தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமையன்று (ஜூலை 19) தெரிவித்தார்.

ஆனால், இணையம் வழித் தாக்குதல் நடத்தும் உளவுக் குழுவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவிக்கவில்லை.

“சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இணையம் வழி தாக்குதலை நடத்துவது யார் என்பதை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு யாருடன் தொடர்பு உள்ளது, எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து பேச விரும்பவில்லை,” என்று சொங் பாங்கில் நடைபெற்ற சமூக நிகழ்வில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு எதிராக நடத்தப்படும் இணையம் வழி தாக்குதல்களில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே பொதுமக்களிடம் தெரிவிக்கப்படுவதாக சண்முகம் கூறினார்.

தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“இம்முறை நடத்தப்படும் இணையம் வழி தாக்குதல் பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கலாம் என்று முடிவெடுத்தோம். தாக்குதல் நடத்துவோர் யார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கலாம் எனத் தீர்மானித்தோம்,” என்றார் அமைச்சர் சண்முகம்.

சிங்கப்பூரின் முக்கியத் தகவல் உள்கட்டமைப்பின் மீது UNC3886 உளவுக் குழு நடத்திய இணையம் வழித் தாக்குதல் பற்றி அனைவரிடமும் தெரிவிக்க அரசாங்கம் முடிவெடுத்தற்காக காரணத்தைப் பற்றி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ சனிக்கிழமை (ஜூலை 19) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“இணைய உலகில் சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிரட்டல்கள் பற்றி சிங்கப்பூரர்களுக்குத் தெரிய வேண்டும். இத்தகைய சம்பவங்கள் பற்றி பொதுமக்களிடம் தெரிவிப்பதற்கான உகந்த நேரம் என்பது கிடையாது.

“பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே சமயம் செயல்பாட்டுப் பாதுகாப்புக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. குறிப்பாக, மிரட்டலை முறியடிப்பதற்கான நடவடிக்கை நடப்பில் உள்ளபோது இது மிகவும் முக்கியம்,” என்றார் அமைச்சர் டியோ.

சிங்கப்பூரின் இணையக் கட்டமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருந்த சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு அதன் பங்காளித்துவ அமைப்புகளுடன் அயராது உழைத்து வருகிறது என்று அவர் கூறியதாக தமிழ்முரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால், சிங்கப்பூரின் இணையக் கட்டமைப்பை, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பினால் தனியாக இருந்து பாதுகாக்க முடியாது என்றார் அவர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset