
செய்திகள் தமிழ் தொடர்புகள்
"எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளையடிக்க முயற்சி'': திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
சென்னை:
கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின்மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்க திமுக அரசு முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.
அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மூன்று நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்றும், அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு எல்இடி திரைகளைப் பொருத்தும் பணியை வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையை விட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்திற்கு ஒரு எல்இடி திரைக்கு சுமார் ரூ.7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான எல்இடி திரையை வாங்க சுமார் ரூ.10,000/- வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும், பஞ்சாயத்து கிளர்க்குகளும் அந்நிறுவனத்திற்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் எல்இடி திரைக்கான தொகையையும் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
ஏற்கெனவே 2006-2011 ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி தங்களது குடும்பத் தொலைகாட்சி நிறுவனங்களின் நிதிநிலையை வளர்த்துக்கொண்டது.
ஏற்கெனவே 4 ஆண்டுகளாக வெற்று விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தது போக, ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தராமல், அந்நிதியை மடை மாற்றும் விடியா திமுக ஸ்டாலினின் (ஏமாற்று) மாடல் அரசின் கடந்த நான்காண்டு கால நடவடிக்கைகள் வேதனையைத்தான் தந்துள்ளது என்று தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இந்நிலையில் 4 ஆண்டு சாதனை என்று பொய்யான செய்திகளை வீடியோக்களாகத் தயாரித்து அதை கிராமங்கள்தோறும் எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
'கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்' என்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படும் ஊழல் மாடல் தி.மு.க. அரசு, எல்இடிதிரை அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளை அடிக்க முயல்வது கண்டனத்திற்குரியதாகும்.
மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாங்கள் எதுவும் செய்வோம், யாரும் எங்களைக் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் மக்களின் வரிப் பணத்தை தங்களுடைய சுயநலத்திற்காக செலவிடுவது கண்டிக்கத்தக்கது. அதற்கான விலையை விரைவில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பின் தர நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.' இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm