நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் இரவு நேர பாலியல் வன்கொடுமை: பெண் விமானியை வேட்டையாட முயன்ற மூவரை காவல்துறை தேடுகிறது

மும்பை:

பெண் விமானியை மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மும்பையில் கடந்த வியாழக்கிழமை(ஜூன் 19) இரவு தமது கணவருடன் ஒரு ஓட்டலில் உணவருந்திவிட்டு வீட்டுக்கு காரில் சென்ற 28 வயதான பெண் விமானிக்கு சிலர் அதே காரில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

கடற்படை அதிகாரியான அந்த பெண்ணின் கணவருக்கு இன்னும் கடற்படையிலிருந்து வீடு ஒதுக்கப்படாததால், அவர் மும்பையிலுள்ள கடற்படையின் குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறிய வீட்டில் தனியாக தங்கியுள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி காத்கோபார் பகுதியில் தனி வீட்டில் வசிக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முப்பையிலுள்ள ஒரு ஓட்டலில் உணவருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதற்காக அவரது கணவர் தனியார் வாகன சேவை நிறுவனமான ‘ஊபர்’ மூலம் ஒரு காரை புக் செய்து அவரது மனைவியை அதில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அதன்பின், அவர் தமது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், காரில் இருக்கும் பெண் விமானியின் வீட்டுக்கு செல்லாமல் மாற்றுப்பாதையில் அந்த ஓட்டுநர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நடுவழியில் மேலும் இரு ஆண்கள் அந்த காரில் ஏறியுள்ளனர். அதில் ஒருவர், பின்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த விமானிக்கு பாலியல் தொல்லையளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.

எனினும், வாகனத்தின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததாலும் தன்னைச் சுற்றி 3 ஆண்கள் இருந்ததாலும் அவர்களை மீறி அவரால் வெளியேறவோ உதவியோ கோர முடியவில்லை.

இந்தநிலையில், நல்வாய்ப்பாக அவர்கள் செல்லும் வழியில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்றில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததைக் தூரத்திலேயே கண்ட ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். அதன்பின் காரில் ஏறிய இரு ஆண்களும் வெளியே தப்பித்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அந்த ஓட்டுநர் காரை விமானியின் வீட்டுக்கு ஓட்டிச் சென்று அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. 

அதன்பின், இச்சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்த விமானி, அடுத்தநாள் காவல் நிலையத்தில் கணவருடன் சென்று புகாரளித்துள்ளார். அதில், கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த விமானிக்கு அந்த நபர் பதில் ஏதும் சொல்லாமல் தப்பித்து செல்வதிலேயே குறியாக இருந்ததை அந்த விமானி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில், சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், அவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை(ஜூன் 21) தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset