
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட மோடி அரசு அஞ்சுவது ஏன்?: செல்வப்பெருந்தகை
சென்னை:
“ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கவும், விளக்கம் அளிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், மோடி அரசு அதை செய்ய ஏன் அஞ்சுகிறது?,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், தீரத்துடனும் ஈடுபட்டு, பெரும் தியாகங்கள் புரிந்துள்ள முப்படை வீரர்களை போற்றி, பாராட்டுகிறேன்.
இந்த தாக்குதலின் போது, இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், அதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால் இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், சமீபத்தில் சிங்கப்பூரில் அளித்த நேர்காணலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். மே 7 அன்று நடத்தப்பட்ட முதல் கட்ட தாக்குதலின் போது சில விமானங்களை இழக்க நேர்ந்தாலும், அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, மே 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்திய தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மோடி அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். முப்படை தலைமை தளபதி சிங்கப்பூரில் அளித்த பேட்டிக்குப் பிறகு, கேட்கப்பட வேண்டிய மிகவும் முக்கியமான கேள்விகள் உள்ளன என்றும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றை கேட்க முடியும் எனக் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தான் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த 20 நாட்களில் டிரம்ப் பத்தாவது முறையாக இப்படி பேசியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி இதைப் பற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். நமது ராணுவத்தினரின் வீரத்துக்கும், சாதனைகளுக்கும் நான் தான் காரணம் என பெருமை பேசி வருகிறார். போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னணி பற்றி தெளிவுபடுத்த மறுக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட போது, அது குறித்து பாகிஸ்தானுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தாக தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நமது தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம் என்றும், இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இவை அனைத்தைப் பற்றி விவாதிக்கவும், விளக்கம் அளிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், மோடி அரசு அதை செய்ய ஏன் அஞ்சுகிறது ?
1962 இந்தியா சீனா போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், இழப்புகள் பற்றி அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிடமும் பேசி, அனைத்து கேள்விகளுக்கும் நேர்மையாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமனிதர் நேருவிடம் இருந்த நேர்மை, அற உணர்வை, இந்துத்துவ பாசிசத்தை முன்னெடுத்து வரும் பிரதமர் மோடியிடம் எதிர்பார்க்க முடியாது தான்.
ஆனால் நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm
ஆர்டிபி கல்வி நிறுவனம் & அறக்கட்டளையின் வெள்ளிவிழா
July 25, 2025, 8:09 pm
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
July 25, 2025, 4:51 pm
வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு
July 24, 2025, 9:08 am