நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்

சிங்கப்பூர்:

சாங்கி விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காக வெளிநாட்டவர் ஒன்பது பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீண்டும் சிங்கப்பூர் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 30லிருந்து 48 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள், தங்கள் நாடுகளைச் சேர்ந்த மற்ற பயணிகளிடம் தங்கம், கைப்பேசிகளைச் சொந்த நாட்டுக்குக் கொண்டுசென்று அங்கு சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்க உதவி கேட்டிருக்கின்றனர்.

அவ்வாறு செய்யும் பயணிகளுக்குப் பணம் தரப்படும் என்று குற்றவாளிகள், உதவும் பயணிகளுக்கு வாக்குறுதி அளித்ததாகக் காவல்துறை, சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், மனிதவள அமைச்சு, சாங்கி விமான நிலையக் குழுமம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாடுகடத்தப்பட்ட ஒன்பது பேரின் பாலினம், அவர்களின் சொந்த நாடுகள், அவர்கள் எப்போது நாடுகடத்தப்படுவர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நான்கு அமைப்புகளும் இம்மாதம் 22ஆம் தேதியன்று கூட்டு முறியடிப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு அந்த ஒன்பது பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் எட்டுப் பேரின் வேலை அனுமதிச்சீட்டுகள் (work permits), எஸ் பாஸ் வேலை அனுமதி அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. எஞ்சியவர் வைத்திருந்த, குறுகிய காலத்துக்குப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டது.

குறுதிய காலப் பயண அனுமதி அட்டை, சுற்றுலா மேற்கொள்வது, மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்து செல்வோருக்கானது. அதைக் கொண்டு சிங்கப்பூர் வருவோர் இங்கு சம்பளத்துக்கோ சம்பளம் இல்லாமலோ வேலை செய்யக்கூடாது.

“முன்பின் தெரியதோருக்காகப் பொருள்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அதிகாரிகள், பயணிகளுக்கு நினைவூட்டுகின்றனர். அவ்வாறு செய்தால் பயணிகள் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைதாகக்கூடும், நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கக்கூடும்,” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset