
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 11) பெரும்பாலான இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று வழக்கமான அளவிலும், நாளை முதல் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், நாளை குமரிக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 8, 2025, 4:00 pm
2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்
March 6, 2025, 9:04 pm