செய்திகள் சிந்தனைகள்
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
இளைத்தல் என்பது உடல் இளைத்துப்போவதை மட்டுமல்ல,
அறிவில், ஆற்றலில், உறுதியில், ஊக்கத்தில் என வாழ்வின் எல்லா நிலைகளிலும் இளைத்துப்போதலையும் குறிக்கும்.
அவ்வாறு இளைத்துப் போதல் கூடாது, அது இகழ்ச்சிக்குரியது என்கிறார் பாரதியார். அதனால்தான் “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்” என்றும் பாடினான்.
“வலிமையற்ற ஓர் இறைநம்பிக்கையாளனைவிட வலிமையுள்ள ஓர் இறைநம்பிக்கையாளன் இறைவனின் அதிக விருப்பத்துக்கு உரியவர்” என்றார் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.
இங்கு வலிமை என்பது உடல் வலிமையை மட்டுமல்ல, இதர வலிமைகளையும் குறிக்கும்.
இறைநம்பிக்கையாளர்கள் அறிவில் இளைத்துப்போகக் கூடாது என்று இஸ்லாமியத் திருநெறி அழுத்தமாகக் கூறுகிறது.
நபிகளாருக்கு அருளப்பட்ட முதல் வசனமே, “படிப்பீராக..உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு...” என்றுதான் ஓங்கி முழங்குகிறது.
குர்ஆன் அருளப்பட்டதற்குப் பிந்தைய ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அக்கால கட்டத்தில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
அதேபோல் மனித இனம் ஆன்மிகத்தில் இளைத்துப்போகக் கூடாது என்பதற்காக இஸ்லாமியத் திருநெறி வழிபாடுகள் பலவற்றையும் கடமையாக்கியது.
தொழுகை,நோன்பு, வேதம் ஓதுதல்,புனிதப் பயணம் மேற்கொள்ளுதல், பாவ மன்னிப்பு கோருதல், இறைவனை தியானித்தல் என்று வழிபாட்டுப் பட்டியல் நீளும்.
ஒரு சமுதாயம் ஆன்மிகத்தில் இளைத்துப் போனால் பிறகு வேறு எந்தத் துறையில் முன்னேறினாலும் அதனால் நிலையான நன்மைகள் கிடைக்காது.
‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை”- ஒரே வரியில் பொருளியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டான் வள்ளுவன்.
சமுதாயம் பொருளாதாரத்தில் இளைத்துப் போனால் அதனால் ஏற்படும் விளைவுகளும் மோசமாகவே இருக்கும்.
ஆகவேதான் நேர்மையான வழியில் பொருளீட்டுவதற்கும் இஸ்லாமியத் திருநெறி முக்கியத்துவம் அளிக்கிறது.
வறுமையற்ற சமுதாயத்தை உருவாக்க என்னென்ன வழிகாட்டுதல்கள் தேவையோ அவை அனைத்தையும் வான்மறை வழங்கியுள்ளது.
அந்த வழிகாட்டுதலுக்கு ஏற்ப உலகில் ஆட்சிமுறை இருந்தபோது தான தர்மங்களை வாங்கிச் செல்ல ஏழைகளே இருக்கவில்லை என்று வரலாறு கூறுகிறது.
கல்வியில் இளைத்தல் அறவே கூடாது.
‘அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதுக்கு?’ என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் கல்வியை மறுக்கிறார்கள்.
ஆனால் நபிகளார், “ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கல்வி கற்பது கட்டயாக் கடமை” என்று கூறி கல்வி கற்பதை மார்க்கக் கடமையாகவே ஆக்கினார்.
இவ்வாறு அறிவு, ஆன்மிகம், பொருளாதாரம், மனித உரிமை, மனிதநேயம், பெண்ணுரிமை, அரசியல் வலிமை, உறவுகளைப் பேணுதல் என அனைத்துத் துறைகளிலும் இளைத்தல் போக்கை இல்லாமலாக்கி மனித குலத்துக்கு வலிமை சேர்த்தது இஸ்லாம்.
இறைநெறி நமக்குச் சொல்லும் இனிய அறிவுரை: “இளைத்தல் இகழ்ச்சி.”
“ஒரு தீமை நடப்பதைக் கண்டால் அதைக் கையால் தடுங்கள். இல்லையேல் நாவால் தடுங்கள். அதுவும் முடியாவிட்டால் மனத்தளவிலாவது அதை வெறுத்து ஒதுக்குங்கள். இது இறைநம்பிக்கையின் கடைசிப் படித்தரமாகும்.” (-நபிமொழி)
- சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 10, 2025, 8:40 am
நளினமான வார்த்தைகள் - வெள்ளிச் சிந்தனை
January 3, 2025, 9:27 am
7 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பார்கள்! ஆனால்..! வெள்ளிச் சிந்தனை
December 27, 2024, 8:05 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 25, 2024, 11:03 pm
"இறைவனிடம் கையேந்துங்கள்..” மனிதநேயக் குரலுக்கு நூற்றாண்டு! நாகூர் ஹனீபா பிறந்த நாள்!
December 20, 2024, 9:22 am
கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 13, 2024, 7:47 am
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 11, 2024, 6:49 pm