நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கட்டியணைக்காவிட்டாலும் பரவாயில்லை. எதிரிகளைப் போன்று ஏன் முகம் திருப்பிச் செல்ல வேண்டும்? - வெள்ளிச்சிந்தனை

துன்பம் சூழ்ந்த தபூக் போருக்காக மக்களிடமிருந்து நபிகளார் நிதி திரட்டினார்கள்.

அபூபக்கர் (ரலி) முழுச் சொத்தையும் கொண்டு வந்தார். உமர் (ரலி) பாதி சொத்தைக் கொண்டு வந்தார். நபித்தோழர்கள் தங்களால் இயன்றதைக் கொண்டு வந்தனர். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைக் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருக்க...

உல்பத் இப்னு ஸைத் எனும் ஏழை நபித்தோழர் கண்கொட்டாமல் அந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பார்த்தவர் மனதில் ஏக்கப் பெருமூச்சு. இறைப் பாதையில் கொடுக்க தம்மிடம் எதுவும் இல்லையே என்று கண்ணோரம் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.

வேகமாக நபிகளாரிடம் வந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை. தர்மம் செய்ய என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் உங்களை சாட்சி வைத்துக் கூறுகிறேன். என்னை யாரெல்லாம் திட்டினார்களோ, யாரெல்லாம் கண்ணியக் குறைவாக நடத்தினார்களோ; அவர்களுக்கு என் கண்ணியம், மரியாதையை நான் தர்மம் செய்துவிட்டேன்''.

நபிகளார் அப்போது எந்த பதிலும் சொல்லவில்லை. மறுநாள் தோழர்களிடம், "அவர் எங்கே?'' என்று கேட்க, அவரும் வந்தார்.

அவரிடம் நபிகளார், "வானவர்களிடம் அல்லாஹ் உம்மைக் குறித்து பெருமை கொள்கிறான். உமது தர்மத்தை அவன் ஏற்றுக்கொண்டான்'' என்றார்கள். (அபூதாவூத், ஸஹீஹ் அல்பானி)

அடுத்தவர் தவறை மன்னிப்பதுதான் அல்லாஹ் அதிகம் விரும்பும் செயல்.

உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இடையே நடந்த சண்டையில், சத்தியம் உங்கள் பக்கம் இருந்தாலும் பரவாயில்லை..

உங்கள் கண்ணியத்தை அல்லாஹ்வுக்காக தர்மம் செய்துவிடுங்கள். அந்த தர்மத்தை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.

உங்களுடன் மோசமாக நடந்த அண்டை வீட்டாருக்கு உங்கள் கண்ணியத்தை தர்மம் செய்யுங்கள். நிச்சயம் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான்.

அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் வேறென்ன வேண்டும் நமக்கு?

மனிதன் ரோஷம் மிக்கவன். உபதேசம் செய்வது எளிது, செயல்படுத்துவது கடினம் என்று எனக்கும் தெரியும்.

ஆயினும் நண்பர்களைப் போன்று கட்டியணைக்காவிட்டாலும் பரவாயில்லை. எதிரிகளைப் போன்று ஏன் முகம் திருப்பிச் செல்ல வேண்டும்?

வாழ்க்கை எத்தனை நாள் நீடித்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?

தண்ணீர் அதன் இயல்பான நிலைக்குத் திரும்பாவிட்டாலும்; மெதுவாகவேனும் ஓடட்டுமே. 

ஏனெனில், தேங்கி நிற்கும் தண்ணீர் கெட்டுவிடும்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset