நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பான, ஆரோக்கியமான பணிச்சூழல் அவசியம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பணிச்சூழல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதன்மைத் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. காணொலி வசதி மூலம் நடைபெற்ற  நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக நிகழ்வில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ஒட்டுமொத்த உலகையும் தாக்கிய கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறக்க இயலாது என்றும், தொழிலாளர் வர்க்கம் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று தாக்கத்துக்கு மத்தியில் பொருளியலை மீட்டெடுப்பது பெரும் சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றும் அதற்காக அனைவரும் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

May be an image of 2 people, people standing and text that says 'OSHMP 2025 MAJLIS PELANCARAN PELAN PLLANINDUK KESELAMATAN DAN KESIHATAN KESIHATANPEKERJAAN PEKERJAAN 202 202కి UCAPAN YBDATUK SERIM. SARAVANAN'

இத்தகைய சூழலில் தொற்றுநோய் மேலும் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்திற்குப் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பணிச்சூழல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகிறது என்றார்.

"காரணம் மலேசியர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் ஒரு புதிய நடைமுறையில், வேலைவாய்ப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் அனைவரும் நல்லிணக்கத்துடனும் செழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,

"குறிப்பாக கோவிட்-19க்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை உறுதி செய்யும் அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இப்புதிய திட்டம் அமைந்துள்ளது," என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.

பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதற்கும், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள ஓர் உறுதியான நடவடிக்கைதான்  தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதன்மைத் திட்டம் 2021-2025 என்றார் அவர்.

தொழிலாளர் பாதுகாப்பு, உடல்நலம், சுகாதாரம் தொடர்பில் தேசிய மன்றம் உருவாக்கிய இந்த ஐந்து ஆண்டுகாலத் திட்டமானது, தொழிலாளர்களின் ஆரோக்கியமான பயணத்தை உறுதி செய்யும் பாதுகாப்புத் திட்டமாகும்.

"இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு யுக்தியும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம், உடல்நலம், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது இத் திட்டம்.

"முதலாளிகள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நாம் செயல்படுத்த இயலும். பாதுகாப்பான, ஆரோக்கியமான தொழிலிடக் கலாச்சாரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்," என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset