நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை

ஜொகூர்பாரு:

கடந்த வாரம் இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், இந்தோனேசிய இளம் அறிவியலாளர் சங்கத்தின் சிறப்பு விருது, மிகா விருது, அனைத்துலக நீதிபதிகளின் விருதையும் பெற்று அனைத்துலக ரீதியில் பெயர் பொறித்தனர். 

பன்னிரெண்டு நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் குழுக்கள் பங்கெடுத்த இப் போட்டியில் பள்ளி மாணவர்களின் இச் சாதனை ரினி தமிழ்ப்பள்ளிக்குப் புகழாரம் சூட்டுவதாக அமைந்தது.   

ஆசிரியை மு. சந்திரமோகினி தலைமையில் ஆசிரியைகள் வீ. பவித்திரா, மு. திவியா ஆகியோரின் சீரிய பயிற்றுவிப்பில் படிநிலை இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீ. லெச்மிதா, ச. வந்தனா, கோ. ஹிர்த்தனா, பி. ரேஷ்மா இப்போட்டியில் வெற்றி வேட்கையோடு களமிறங்கி சாதனை படைத்துள்ளனர். 

இம்மாணவர்கள் விஷன் சூப்பர் ஹீரோ ஐஓடி காலணி எனும் புத்தாக்கக் கண்டுபிடிப்பினை உருவாக்கி இச் சாதனையைப் படைத்தனர். 

இக் கண்டுபிடிப்பானது பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கான சிறப்புத் தொழில்நுட்ப நவீன காலணி. இந்தக் காலணி, பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக அறிகுறிகளை வழங்கி வழிகாட்டும் ஐஓடி அம்சங்களைக் கொண்டதாகும். 

மாணவர்கள் அனைத்துலக ரீதியில் சாதனை படைத்தது ரினி தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்த தலைமையாசிரியை சு. தமிழ்ச்செல்வி அனைத்துலக ரீதியில் தங்களின் திறமையை வெளிபடுத்திச் சிறந்த அடைவுநிலையைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துரைத்ததோடு மேலும் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இப் பள்ளி மாணவர்கள் படைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

மேலும், இவ்வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்து பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதோடு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பக்கபலமாய் நின்ற இணைப்பாட ஆசிரியை மு.சந்திரமோகினி, பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நா.சுரேஷ், அவர்தம் செயலவை உறுப்பினர்கள், பள்ளி வாரியக் குழுவினர் மற்றும் பெற்றோர்களுக்கும் தலைமையாசிரியர் அவர்கள் நன்றி, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset