நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு 11 லட்சம் ரிங்கிட் இலவச பேருந்து கட்டணம்; இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் அடுத்தாண்டும் தொடர்கிறது: பாப்பா ராயுடு

ஷா ஆலம்:

2025 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு மீண்டும் மானியங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதை பெரிதும் வரவேற்கிறேன்.

மாநில மனிதவள, வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு இதனை தெரிவித்தார் 

சிலாங்கூர் மாநில அரசினால் இந்திய சமூகத்திற்காக அமல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் அடுத்தாண்டும் தொடர்கிறது.

குறிப்பாக, முஸ்லிம் அல்லாதோருக்கான வழிபாட்டுத் தலங்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டணத் திட்டத்திற்கான மானியம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்கள், பௌத்தக் கோயில்கள், கிருஸ்துவ தேவலாயங்கள் உள்ளிட்ட  முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான வருடாந்திர மானியம் 60 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 80 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இலவச பள்ளி பேருந்துக் கட்டணத் திட்டத்திற்கு அடுத்தாண்டு பட்ஜெட்டில் 11 லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு இத்திட்டத்திற்கு 10 லட்சம் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் பெருநாள் கால இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மானியமும் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது .

 இவ்வாண்டு தீபாவளி பெருநாளின் போது அனைத்து 56 தொகுதிகளையும் சேர்ந்த வசதி குறைந்த 22,000 குடும்பங்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 44 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருந்தது.

மேலும் குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்களுக்கு வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்கும் ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவுக்கு அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல் அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்கும் மற்றொரு திட்டமான புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்திற்கு 20 ரிங்கிட் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்று பாப்பாராயுடு கூறினார்.

மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு  கடந்த ஆண்டுகளைப் போலவே அடுத்தாண்டிற்கும் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது 

அரசாங்கம், தனியார் உயர்கல்விக் கூடங்களில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்கும் திட்டத்திற்கு 15 லட்சம் ரிங்கிட் அறிவிக்கப்பட்டுள்ளது .

மாணவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் அதிகமான மாணவர்கள் பயன் பெறும் வகையிலும் இவ்வாண்டு தொடங்கி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 3,000 ரிங்கிட்டும் டிப்ளோமா மாணவர்களுக்கு 2,000 ரிங்கிட்டும் வழங்கும் வகையில் இதிட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல், மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் தீபாவளி, தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை ஏற்று நடத்துவதற்கு வழங்கப்படும் மானியத்தை அடுத்தாண்டும் கணிசமான அளவு அதிகரிக்க மந்திரி புசார் வாக்குறுதியளித்துள்ளார் என அவர் சொன்னார்.

இந்த தருணத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset