நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிழி  இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பினாங்கு:

தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் இந்த ஆண்டு தீபாவளியை நெகிழி என்ற பிளாஸ்டிக் இல்லாத விழாவாக மாற்றுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

தீமை என்னும் இருள் அகன்று நன்மை எனும் வெளிச்சம் பிறக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது தீபாவளி என அச் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

 இன்றைய காலகட்டத்தில் இந்தப் பண்டிகையை மாசு இல்லாமல், செயற்கை உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு இல்லாமல் பசுமையாகக் கொண்டாடுவதில் தான் சவாலே இருக்கிறது என்றார் அவர்.

 தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாட  வேண்டும்.

 தீபாவளிப் பண்டிகையில் முக்கியமானது விளக்குகள். மக்கும் தன்மையில்லாத விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

முற்றிலும் எரிந்து விடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மாட்டுச் சாணத்தால் ஆன விளக்குகள், தேனீக்களின் மெழுகால் செய்யப்பட்ட விளக்குகள், ரோஜா இதழ் விளக்குகள், ரோஸ் ஆயில் உள்ளிட்டவற்றை வாங்கி வீட்டிற்கும் மனதிற்கும் வெளிச்சத்தை தரலாம்.

செயற்கை விளக்குகள் வேண்டாம்.

பண்டிகை என்றாலே பரிசளிப்பு இல்லாமலா? அந்தப் பரிசின் விலை எவ்வளவு என்பதை விட அதன் பயன் என்ன என்பதில் தான் இருக்கிறது அன்பின் வெளிப்பாடு.

பொருட்களாக பரிசளிக்காமல் சுத்தமான காற்றை பரப்பக் கூடிய செடிகளை பரிசளியுங்கள்.

தீபாவளியென்றாலே அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தல் பிரதானம். 

இந்த எண்ணெய்க் குளியலிலும் ஆரோக்கியத்தை தேர்வு செய்யுங்கள்.

நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி, ரோஸ், வேப்பிலை, துளசி உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திய ஆரோக்கிய பொடிகளை தேர்வு செய்யலாம்.

இது 100 சதவிகிதம் இயற்கையானது எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.

தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் பெற்ற வெற்றியை தீபாவளி கொண்டாடுகிறது. 

தீபாவளி அன்பால் நிரப்பப்பட வேண்டும், நெகிழியோடு அல்ல.

தீபாவளிப் பண்டிகையை பொறுப்புடனும், சுற்றுச்சூழல் நட்புடனும் கொண்டாடுவது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்கும் முன்னுதாரணமாகவும் அமைகிறது.

சில இனிப்பு விற்பனையாளர்கள், இனிப்புகளை வாங்கும் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பைகளை கோருவதாக புகார் கூறுகின்றனர் என சுப்பாராவ் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும், காலநிலை மாற்றத்துக்கும் பங்கம் விளைவிப்பது உட்பட பல வழிகளில் நெகிழி கேடு விளைவிப்பதால், இந்தப் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.   

நெகிழி இல்லாத பண்டிகையை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும்.

நெகிழி பாத்திரங்கள், அலங்காரங்கள்  வேண்டாம். இனிப்புகளை வாங்க உங்கள் சொந்த துருப்பிடிக்காத சில்வர் கொள்கலன்களைக் கொண்டுச் செல்லுங்கள். நெகிழி தட்டுக்களில் உணவு பரிமாற வேண்டாம்.

நெகிழி அலங்காரத்தால் உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டாம்.

நெகிழி மா இலைகளை வாங்க வேண்டாம்.

இயற்கையான பச்சை இலைகளைப் பயன்படுத்துங்கள் என்றார் சுப்பாராவ்.
 
ஆகவே இந்த ஆண்டு தீபாவளியை நெகிழி இல்லாத பண்டிகையாக குடும்பத்தோடு கொண்டாடும்படியும், நெகிழி என்ற அரக்கனை ஒழித்துக்கொட்டுவோம் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset